பசில் ராஜபக்சவை விசாரிக்க இண்டர்போலின் உதவியை நாடும் புதிய அரசு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விசாரணை செய்வதற்கு இண்டர்போல் என்ற சர்வதேச பொலிஸாரின் உதவியை நாட புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவிய நிலையில், எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்றார். இதனையடுத்து தேர்தல் முடிவடைந்த மறுநாளே அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
இந்த நிலையிலேயே பசில் ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த இண்டர்போலின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த ஆட்சியின் போது பசில் ராஜபக்ச பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து ஜே.வி.பி லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அதேவேளை மஹிந்தவின் மூத்த புதல்வர் மீதும் இதே குற்றச்சாட்டை அந்தக் கட்சி சுமத்தியுள்ளது.
இதனையடுத்தே அமெரிக்காவிலுள்ள பசிலை விசாரணைக்கு உட்படுத்த புதிய அரசாங்கம் இண்டர்போலின் உதவியை நாட தீர்மானித்துள்ளதாக புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளுக்கு அடுத்தே பசில் ராஜபக்ச நாட்டை விட்டு எந்தவித இடையூறும் இன்றி வெளியேறியதாக கொழும்பு அரசியலில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








