Breaking News

அம்பலத்திற்கு வந்த டக்ளஸின் தில்லுமுள்ளு

யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

உரிமையாளர்கள் மேற்படி அடாத்திற்கு எதிராக நீதிமன்றை நாட தீர்மானித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
மேற்படி முன்னாள் அமைச்சர் கடந்த பல வருடங்களாக சிறீதர் தியேட்டர் கட்டிடத்தை மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறிக் கொண்டிருந்தன.

ஆனால் சிறீதர் தியேட்டர் மட்டுமல்லாமல் அந்த தியேட்டர் உரிமையாளர்களுக்குச் சொந்தமான ஒரு வீடு மற்றும் காணிளையும் சேர்த்து சுமார் 13 பரப்பு காணியையும்,அதிலுள்ள கட்டிடங்களையும் அவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் குறித்த நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய வரியைக் கூட அவர் செலுத்துவதில்லை. மாறாக மாநகர சபையிலிருந்து வரி செலுத்துமாறு வரும் அறிவித்தல் துண்டுகளையும் கூட அவர் மறைத்து வைத்திருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் வருடம் ஒன்றுக்கு 22ஆயிரம் ரூபா வீதம் உரிமையாளர்கள் யாழ்.மாநகரசபைக்குச் செலுத்தியிருக்கின்றனர்.குறித்த வரி உரிமத் தை காணியில் தற்போதுள்ளவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு காணி உரிமையாளர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு மாநகரசபை பதிலளிக்காததுடன், நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

மேலும் குறித்த முன்னாள் அமைச்சரிடம் காணியை விடுவிக்குமாறு பல தடவை காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தபோதும் இப்போ, அப்போ என காலம் தாழ்த்தியுள்ளார்.குறித்த அமைச்சர். இந்நிலையில் மேற்கண்டவாறு சிறீதர் தியேட்டர் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோதே மேற்படி விடயத்தை அவர்கள் கூறினர்.

மிகுந்த அச்சத்துடன் இருக்கும் குறித்த காணி உரிமையாளர்கள் தமது காணியை விடுவித்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடவும் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.மேலும் குறித்த முன்னாள் அமைச்சர் தான் காணி உரிமையாளர் என மாறி மற்றொருவரிடம் வாடகையை கொடுத்து தாம் ஏமார்ந்திருப்பதாக காணி உரிமையாளரிடம் கூறியிருப்பதாக உரிமையாளர்கள் கூறினர்.

இதேவேளை குறித்த அமைச்சர் கடந்த பல வருடங்களாக தான் இருந்த கட்டிடத்தில் பாவிக்கப்பட்ட மின்சாரத்திற்கான நிலுவையினை செலுத்தாமல் உள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றமையும், இந்த விடயத்தை மின்சாரசபை அதிகாரிகள் இதுவரையில் மூடி மறைத்து வைத்திருந்த விடயமும் தற்போது மெல்லக் கசிய ஆரம்பித்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக தக்கதாகும்.