Breaking News

13வது திருத்தச்சட்டம் குறித்து மோடியுடன் பேசுவோம் - கூட்டமைப்பு

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமரைச் சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கும், 13வது திருத்தச்சட்டம் குறித்த கரிசனைகள் குறித்து தாம் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1987ம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.