மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வருவாரா? - ஆர்.யசி
அசைக்க முடியாத அரசியல் கோட்டையினை கட்டி அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்தி தனது நம்பிக்கைக்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற சகாக்களை அருகில் வைத்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார்
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது அபிவிருத்திகள் விசாலமாகின சர்வதேசத் தரத்துடன் கூடிய மாநாடுகள் களியாட்டங்கள் நடந்தேறின. இனி ஒருபோதும் விழாது என்று எண்ணிய தனது மணிமுடி பத்தாவது ஆண்டே வீழ்த்தப்பட்டது. என்னதான் சாகசங்களைக் காட்டினாலும் பார்வையாளர்கள் ரசிக்காவிடில் அது தோல்வியிலேயே போய் முடியும்.
அதே நிலைமைதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்விழும் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் துருப்புச்சீட்டுக்களை வாங்கி அக்கூட்டணிக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பொது எதிரணி இறுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியினை வீழ்த்தியது. சிங்கள பௌத்த வாக்குகளை நம்பி தனித்து வெல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவு ஒரு தேசிய கூட்டணியினால் கலைக்கப்பட்டது. ஒன்றுபட்ட நாட்டிற்குள் தமிழ், சிங்கள, முஸ்லிம் உறவு முறை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள நூறுநாள் தேசிய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது. இப்போது அனைவரும் கேட்கும் கேள்வி என்னவெனில் நூறு நாட்களின் பின்னர் யார் அரசாங்கம், யார் எதிர்க்கட்சி என்பதுதான். நூறு நாட்கள் வரைதான் கூட்டு அரசாங்கம் என்ற போர்வையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரத்திர முன்னணியா? ஐக்கிய தேசிய கட்சியா அடுத்து தனித்து ஆட்சி நடத்துவது? எந்த அரசாங்கம் யாரின் தலைமையின் கீழ் ஆட்சி செய்யப்போகின்றது என்பது வாக்களித்து மாற்றத்தினை ஏற்படுத்திய மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவே அமைந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த பிரதமருக்கான சமர் ஆரம்பித்து விட்டது. யார் பிரதமராகப் போகின்றார். ஆட்சி மாற்றத்திற்கு உதவிய நன்றிக்கடனை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தாலும் தொடர்ந்தும் இந்நிலை ஏற்படப்போவதில்லை.
இனிவரும் காலங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றே தமது பிரதமர் பதவியினை தக்க வைத்துகொள்ள வேண்டும். அவ்வாறானதொரு நிலையில் அடுத்த பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கிவிட்ட நிலையில் இப்போது பொதுத்தேர்தலில் களமிறங்கும் எண்ணம் முக்கிய சில உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்கிரம சிங்க போட்டியிட போகின்றார். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது வேட்பாளர் யார்? அதற்கு விடை தேடும் பயணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசுவாசிகள் அதன் பங்களாளிக்கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான வாசு தேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, மேல்மாகாண அமைச்சராகவிருந்த உதய கம்பன்வில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் புதிய கூட்டணியே இவ்விடை தேடும் பயணத்தினை ஆரம்பித்துள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். மஹிந்த சிந்தனையின் கீழ் நாடு ஆளப்பட வேண்டும் என தொடர்ச்சியாக குரல்எழுப்புகின்றனர். அவர்களின் ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் மக்கள் கூட்டங்களிலும் இக்கருத்தினை முன்வைக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாக குறள் எழுப்பி அழைப்பு விடுக்கின்றனர். ஆனால், இக்கருத்துகளை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா? அல்லது அவரின் தூண்டுதலின் பின்னணியிலா இவ்வாறு நடக்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கின்றது. ஆனால், இவை நீண்ட நாட்கள் தொடரப்போவதில்லை. ஏனெனில் விடை கிடைக்க இன்னும் சொற்ப நாட்களே உள்ளன.
அடுத்த பொதுத்தேர்தலில் நடக்கப்போவது என்ன? யார் பிரதமர் வேட்பாளர்? மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவாறா அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடருமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலையில் முக்கிய அரசியல் வாதிகள் தத்தமது சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் தலைமைகளிடம் வினவியபோது...
விமல் வீரவம்ச
சிங்கள மக்கள் இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேசிக்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளை தவிர ஏனைய சகல மாகாணங்களிலும் வாக்குகளை அவதானித்திருந்தால் இது தெளிவாக தெரியும். இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி சிறை பிடிக்கப் பட்டுவிட்டது. சர்வதேச சக்திகளின் பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சி வலையில் சுதந்திரக் கட்சியினர் சிக்கி விட்டனர். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சூழ்ச்சிகளை காய் நகர்த்தல்களை செய்து வருகின்றது.
தேசிய அரசு அமைந்த பின்னர் வடக்கில் கூட்டமைப்பிற்கு ஏற்ற மாற்றங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, இப்போது பொது மக்களுக்கு நன்றாகத் தெரிகின்றது தேசிய அரசாங்கம் யாருக்காக செயல்படுகின்றது என்பது. எனவே இன்று பௌத்த சிங்கள நாடு அழிக்கப்பட்டு பிரிவினைவாத போராட்ட நாடு உறுதியாகி வருகின்றது. இதை மீட்டெடுத்து தேசத்தினை வென்றெடுக்கவேண்டுமாயின் மீண்டும் தனித்துவமான தலைவர் வரவேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் சாதகமான பல விடயங்கள் இடம்பெற்று யுத்தத்திற்கு பின்னரான ஐந்து ஆண்டுகளில் பிரிவினைவாதம் தலைதூக்க நாம் இடமளிக்கவில்லை.
ஆனால், எம்மை சர்வாதிகாரிகளாக சித்தரித்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டனர். இவர்களை நம்பி வாக்கு கொடுத்த மக்களின் நிலைமை இன்று கேள்விக்குறியாகி விட்டது. எனவே இழந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். பழைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை மீண்டும் கட்டியெழுப்ப வேண் டும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ வரவேண்டும். அதற்கான அழைப்பினை நாம் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு விடுக்கின்றோம். மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்பதுவே. அவர் அரசியலில் மீண்டும் காலடி எடுத்து வைக்க வேண்டும்.
சம்பிக்க ரணவக்க
நாட்டிற்கும் மக்களுக்கும் எது தேவை மக்கள் எதை விரும்புகின்றனர் என்பதன் அடிப்படையிலேயே ஆட்சி அமையும். மக்களின் விருப்பங்களை மீறி தனி ஒருவரால் ஆட்சி நடத்த முடியாது. கடந்த காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை காணப்பட்டது. யுத்தத்தினை வெற்றி கொண்டதனால் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்தனர்.
ஆனால் யுத்த வெற்றி கதைகளை தொடர்ந்தும் கூறிக் கொண்டு மக்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது இம்முறை தேர்தலில் வெளிப்பட்டு விட்டது. இனவாத அரசியல் தேவைப்பட்டது உண்மையே. ஆனால் இவ் இனவாதம் பிரயோகிக்கப்பட்டது தமிழ், முஸ்லிம் அப்பாவி மக்களுக்காக அல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிராகவே. எனவே விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தவே அரசாங்கத்தில் இருந்து கொண்டு கடுமையான போக்கினை கையாண்டோம்.
ஆனால் இன்று மக்கள் ஒற்றுமையினை விரும்புகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். இப்போது அமையப்பெற்றிருக்கும் தேசிய அரசாங்கம் அனைத்து மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. எனவே இம்முறை மக்கள் மஹிந்த ராஜபக் ஷவை வெறுத்துவிட்டனர். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் ஊழல் குற்றங்கள் எவையும் இருக்காது. கடந்த ஆட்சியின் முக்கிய பிரமுகர்கள் செய்த குற்றங்கள் பல வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றன. எனவே அவை இன்று மக்களின் முன்னே நன்றாகத் தெரிவது மட்டுமன்றி உண்மையான விடுதலையினை மக்கள் இன்று உணர்கின்றனர்.
எனவே இந்த ஆட்சியினை தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றதனால் தேசிய அரசாங்கம் வீழ்த்தப்படாது அவ்வாறு தேசிய அரசாங்கம் மக்களுக்கு திருப்தியின்மையாயின் மக்களின் எதிர்பார்ப்பினை எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லையெனின் மக்களே மாற்றத்தினை ஏற்படுத்துவர். ஆனால் ஜனநாயகத்தினை அனுபவிக்கும் மக்கள் இனியொரு போதும் சர்வாதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. குடும்ப ஆட்சியினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
அதேபோல் ஊழல், வறுமையுடன் கூடிய பொருளாதார முறைமையினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆகவே இனி இலங்கையில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் தனது அரசியலை மீண்டும் ஆரம்பிக்காது குடும்ப அரசியல் இடம்பெறப் போவதுமில்லை. அடுத்த பொதுத்தேர்தலில் கட்சிகள் தனித்து களமிறங்கினாலும் தேசிய அரசாங்கம் தொடரும்.
அனுரகுமார திசாநாயக்க
குடும்ப அரசியலின் சர்வாதிகார ஆட்சியும் ஊழல், கொலை, அடக்குமுறைகளே மஹிந்த ராஜக் ஷ ஆட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஒரு தலைவர் என்ற எண்ணம் மாறி ஒரே தலைவர் என்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவு இன்று ஆட்சிமாற்றம் வரை கொண்டு சென்றுவிட்டது. நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டமையும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் தூண்டி விடப்பட்டமையும் கடந்த காலங்களில் அழிக்கமுடியாத வடுக்களாக மாறிவிட்டன.
இலங்கை சர்வதேச அழுத்தங்களில் சிக்கிக்கொள்ள ஒரே காரணம் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமே. தமது சுயநலத்திற்காக நாட் டில் நல்லாட்சியினையும் ஜனநாயகத்தினையும் கேள்விக்குறியாக்கிவிட்டனர். அதில் இருந்து விடுபட நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் பயங்கரமானதாக இருந்தது. உயிரை பணயம் வைத்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளோம். எனவே மக்கள் இனியொருபோதும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியினை விரும்பப்போவதில்லை. அதேபோல் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் ஆட்சி மக்களை திருப்திப்படுத்தும். ஆட்சியா அல்லது ஜனநாயகம் சட்டம் நீதி செயற்படும் ஆட்சியா என்பதை எம்மால் தெரிவிக்க முடியாது. நாம் கடந்த அரசின் ஊழல்களையும் குற்றச்சாட்டுக்களையும் வெளிப்படுத்தியுள்ளோம்.
பயங்கரவாதிகளை இனங்காட்டி அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டு ஆதாரங்களையும் முன்வைத்துள்ளோம். ஆனால் ஆதாரங்கள் பல இருந்தும் இந்த அரசாங்கம் இவர்கள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளையும் இன்னும் முன்னெடுக்கவில்லை. கடந்த அரசாங்கத்தினை மக்கள் மாற்றி புதிய ஆட்சியினை அமைத்தது நல்லாட்சிக்காகவே தவிர தனிப்பட்ட ஒரு சிலரை மாற்றவேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் இவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பார்களா என்பதில் சந்தேகம் எழுகின்றது.
அதேபோல் குற்றவாளிகளை தண்டிப்பதில் அரசாங்கம் மெதுவான போக்கினை கையாள்வது ஏன்? குற்றவாளிகளின் பின்னணியில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றதா? என பல கேள்விகள் எழுகின்றன. எனவே இந்த அரசாங்கம் நல்லாட்சி என்பதை வெறும் வார்த்தைகளில் மட்டும் வைத்துக்கொள்ளாது நடைமுறையில் வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ களமிறங்கப்போவதில்லை. களமிறங்கினாலும் வெற்றிகொள்ள வாய்ப்புக்கள் இல்லை. அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கவும் கடுமையாக பாடுப்பட வேண்டும்.
-ஆர்.யசி-