பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்குமா! இன்று தீர்மானிக்கப்படும்
ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை மீளவும் கிடைக்குமா இல்லையா என்பது குறித்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இராணுவ நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால், சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் வெற்றிடத்திற்கு கட்சியின் துணைத் தலைவராக கடமையாற்றிய ஜயந்த கெட்டகொட புரிநதுணர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார். எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இறுதி நேரத்தில் ஜயந்த கெட்டகொட மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதவரவளிப்பதாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் பின்னர், சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். தண்டனை விதிக்கப்பட்ட தினம் முதல் இந்த பொது மன்னிப்பு அமுலாகும் வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவித்திருந்தார்.
இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபடாத தமக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சரத் பொன்சேகா நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் சடத்தின் 64ம் சரத்தின் அடிப்படையில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து, மீளவும் உறுப்பினர் பதவியை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரியுள்ளார். இந்த மனு தொடர்பிலான சட்ட மா அதிபரின் நிலைப்பாடு இன்று நீதிமன்றிற்கு அறிவிக்கப்படவுள்ளது. சரத் பொன்சேகாவின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) மற்றும் உபுல் ஜயசூரிய (முதலீட்டுச் சபையின் தலைவர்) ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர். ஜயந்த கெட்டகொட சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிறினாத் பெரேரா முன்னிலையாகவுள்ளார்.