Breaking News

பசிலை கைது செய்யுமாறு உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார். 

 அவர் இந்த நாட்டுக்குள் வந்ததன் பின்னர் கைது செய்யுமாறு, நீதிமன்றத்தினால் முன்னர் உத்தரவிடப்பட்டிருந்த உத்தரவை இரத்து செய்து அவரை கைது செய்யாமல், தன்னுடைய சட்டதரணிகள் ஊடாக கொள்ளுபிட்டியவிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு சமூகம் அளிக்குமாறு உத்தரவிட கோரிய வழக்கை, மோஷன் ஊடாக அவரது சிரேஷ்ட சட்டதரணி யு.ஆர் டீ சில்வா கோரியிருந்தார். 

 அந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்ததுடன் முன்னர் விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்பட்டு சந்தேக நபரை முன்னிலைப்படுத்துமாறும் அவர் சந்தேக நபரின் சட்டதரணிக்கு அறிவுறுத்தினார். சிரேஷ்ட சட்டதரணி யு.ஆர் டீ சில்வா உடன் 20 சட்டதரணிகள் முன்னாள் அமைச்சர் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நீதிமன்றத்துக்கு பிரசன்னமாயிருந்தனர். 

 நிதி மோசடி முறைப்பாடு தொடர்பில் நிதி மோசடி பொலிஸ் விசாரணைப்பிரிவு இன்றி இந்த மோஷன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி, கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக திவிநெகும திணைக்களத்தின் ஊடாக பணம் செலவு செய்தமை, மாநாட்டுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவு செய்தமை மற்றும் 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமானங்களை நான்கை திருத்தியமைப்பதற்காக 145 இலட்சம் ரூபாயை செலவு செய்தமை உள்ளிட்ட நிதி மோசடிகள் பலவற்றுடன் அவர் தொடர்புபட்டிருப்பதாக, நிதி மோசடி பொலிஸ் பிரிவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 சுகயீனம் காரணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக எதிர்பார்த்து இருப்பதாக அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டதரணி யு.ஆர் டீ சில்வா தெரிவித்தார். இதேவேளை, அவர், ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.