Breaking News

சுமந்திரன் பொய் சொல்லுகிறார்! கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யவில்லை - சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அண்மையில் கனடாவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு பதியப் பட்டுவிட்டதாக புலம்பெயர் தமிழர்களிடம் முற்றிலும் தவறான கருத்தை கூறியுள்ளார். அவர் புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்ற முயல்கிறாரா? இப்படி சூடாக கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

நீர்வேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு என்பது நீண்டகாலமாக சிக்கலில் உள்ள ஒரு விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் பதிவு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்துகின்றது. ஆனால் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது என்று தமிழரசுக்கட்சி தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிலரும் பதிவை வலியுறுத்துகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்தல் தொடர்பான சரியான கருத்துக்களை தமிழரசுக் கட்சி சார்ந்த தலைமைகள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் புலம்பெயர் தமிழர்களுக்கு தவறான கருத்தை சுமந்திரன் கூறுகிறார். அவர்களுக்குள்ளே தெளிவு இல்லாது இருக்கின்ற பொழுது, ஏன் தவறான, பிழையான கருத்துக்களை புலம்பெயர்ந்தோரிடம் கூறவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நான்கு கட்சிகள் உள்ளன. இருந்தும் கூட்டமைப்பு மூன்று கட்சிகளுடன் இயங்குகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கையெழுத்திட்ட கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அது பதிவல்ல, பதிவுக்கு சரியான ஆவணங்கள் வழங்கப்படவேண்டும். ஆகவே தலைமைகளிடம் காணப்படும் சில முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய கடமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடையது. அதை செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகை நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் பதிலளிக்கையில்,

புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது வடக்கில் மத்திய அரசின் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதில் வடமாகாண சபை அமைச்சர்களோ அல்லது உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி முடிவெடுக்கவில்லை. இதனால் பல விமர்சனங்கள் வெளிவருகின்றன.

முதலமைச்சர் புறக்கணிக்கப்பட்ட பிரதமரின் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக பேசப்பட்டது. திட்டவட்டமான முடிவுகள் எதுவும் தலைமைகள் எடுக்காததால் இவ்வாறான விமர்சனங்கள் வருகின்றன. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களோ வடமாகாண சபை உறுப்பினர்களோ தத்தமது விருப்பத்தின் பெயரில் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்“ என்றார்.