Breaking News

சீனாவுக்கு மென்போக்கை காட்டும் இலங்கை!

இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக கட்டுமானப் பணியின் ஒரு பகுதியை மீள ஆரம்பிப்பதற்கு, சீன நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் எழுத்து மூலமாக நேற்று அனுமதி அளித்துள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சின் செயலர், நேற்று இந்த எழுத்துமூல அனுமதியை, சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இலங்கை அமைச்சரவையில் கடந்த 6ம் நாள் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உடனடியாக, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப்பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டன.

இதையடுத்து, கடலுக்குள் நீரை ஊடறுத்து மேற்கொள்ளப்பட்ட சுமார் 200 மீற்றர் கட்டுமானப் பகுதி, கடல் அரிப்பினால் சேதமடைந்த்து. எனினும், இலங்கை அரசாங்கம் தடைவிதித்திருந்ததால், சீன நிறுவனத்தினால் எதையும் செய்ய முடியாத நிலை இருந்தது.

இதனால் நாளொன்றுக்கு தமக்கு 380,000 டொலர் இழப்பு ஏற்படுவதாகவும் சீன நிறுவனம் கூறியது. இந்தநிலையில், கடலை ஊடுறுத்துக் கட்டப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளைப் பாதுகாக்கும் வேலைத் திட்டங்களை மேற்கொள்ள சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் சீனா செல்லவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் காண்பிக்கப்படும் மென்போக்கே இது என்று கருதப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, பேச்சு நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்று  அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.