மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் யாழ்.நுண்கலைப்பீட மாணவர்கள் (படங்கள் இணைப்பு)
தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தவறிவிட்டனர் என்று குறிப்பிட்டு நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கைப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் மூன்று தினங்களாக வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதன்படி கடந்த 18 ஆம் திகதி மாணவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்து இன்று மாணவர்கள் மீண்டும் பகிஷ்கரிப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். எழுத்து மூலம் தமக்குப் பதில் தரும் பட்சத்திலேயே பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.