Breaking News

வடக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு – கூட்டமைப்பு கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று  அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை  நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினரும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உரிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். போரினால் நாட்டை விட்டு சென்றவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தற்போது தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையும்.

இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக, உயர்பாதுகாப்பு வலயங்களைத் துரிதமாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பிரதமருடனான இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதேவேளை, தேர்தல் தொகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னதாக, வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.