19 ஆவது திருத்தம்! ஆராய்ந்து முடிவெடுக்க உயர்மட்டக்குழு நியமனம்
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக உயர்மட்டக்குழு ஒன்றை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்திருக்கின்றது.
பாராளுமன்றக்கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் இன்று ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்த யோசனைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது. இதனை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைத்தார்கள்.
பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, அதனுடன் இணைந்ததாக தேர்தல் சீர்திருத்த யோசனைகளும் முன்வைக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தினார்கள். அவ்வாறு முன்வைக்கப்பட்டால் மட்டுமே 19 ஆவது திருத்தத்தை தாம் ஆதரிக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இது தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக உயர்மட்டக்குழு ஒன்றை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழு விரைவில் கூடி ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் தெரியவந்திருக்கின்றது.








