Breaking News

சீனாவின் 28 முதலீட்டுத் திட்டங்களை இலங்கை மீளாய்வு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அளிக்கப்பட்ட 35 முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ய இலங்கை அரசாங்கம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களின் திட்டங்களாகும்.

இலங்கை அமைச்சரவையினால் மீளாய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ள 35 நிறுவனங்களின் பட்டியலை தாம் பார்வையிட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில், 28 திட்டங்கள் சீன நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டவையாகும்.

இந்த திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு, அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான உப குழுவினால், அதிகாரிகள் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் குழு மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அமைச்சரவைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இனிவரும் காலங்களில் எல்லாத் திட்டங்களும், கேள்விப் பத்திரம் கோரப்பட்டே, நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கை அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.