Breaking News

விக்னேஸ்வரனின் பெயரைக் கெடுக்க முயன்ற இந்திய ஆங்கில நாளிதழ் – உண்மை நிலை

பிரேமானந்தா ஆசிரம வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாணசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழில், வெளியானது போல, இந்திய நீதித்துறையில் தலையீடு செய்யும் வகையில், வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் எழுதவில்லை என்றும், தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரின் மீது வீண்பழி சுமத்தும் வகையில், ரைம்ஸ் ஒவ் இந்தியா விசமத்தனமாக செய்தி வெளியிட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கமலானந்தாவின் மகன் சிவதி, கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும், இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். அதில், கமலானந்தாவின் மனைவி, மற்றும் ஒற்றை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களான, பாலன் எனப்படும் பாலேந்திராவின் சகோதரர், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் என்பவரின் தாயார், நந்தா எனப்படும் நந்தகுமாரின் மனைவி ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடித்ததை, அனுப்பிய சிவதி மற்றும் அவரது தாயார் ஆகியோர், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில், குறிப்பிட்ட கடிதத்தை, தங்களின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரவோ, ஆசிரமம் தொடர்பாகவோ குறிப்பிடவோ இல்லை என்றும் தெரியவருகிறது. இது தொடர்பாக, முதலமைச்சர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் மற்றும் முதலமைச்சரின் குறிப்புரைக் கடிதம் என்பனவற்றின் பிரதியும், வெளியிடப்பட்டுள்ளது.