Breaking News

மைத்திரியின் உத்தரவினால் தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஜனாதிபதியின் உருவப்பொம்மைகளை எரித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையில் கடந்த 24ம் திகதி இலங்கை, இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பில் நேற்றைய தினம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன் போது எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவினாலேயே தமிழக மீனவர்கள் கொந்தளித்துள்ளனர். இதன்படி தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதிநிதித்துவத்தில் தருமபுரியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உருவப் பொம்மை யொன்று எரிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த கட்சியினால் தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு விடுத்துள்ள இவ் உத்தரவை இந்திய மத்திய அரசு வன்முறையாக கண்டிக்க வேண்டும் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இக்கருத்து தமிழக மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவு பெறாத நிலையில் ஜனாதிபதியின் இக்கருத்து இலங்கை வடபகுதி மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது எனவும்,

எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவோம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு இந்திய மத்திய அரசு கண்டனம் தெரிவித்திரந்தால் ஜனாதிபதி தற்போது இதுமாதிரியான ஆணவ பேச்சை முன்வைத்திருக்கமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.