Breaking News

உள்ளக விசாரணை! முன்னாள் போராளிகளை விசாரணைக்குட்படுத்த முடியாது - கஜேந்திரகுமார்

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசாரணைக்குட்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையினை வலியுறுத்துகிறது. இந்நிலையில் குறித்த உள்ளக விசாரணையில் அரசாங்க படைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறான விசாரணைக்கு நாம் ஒத்துக்கொள்ள முடியாது என்பதுடன் இது சட்டத்திற்கு மாறான ஒரு செயற்பாடாகவும் அமையும்.

சட்டத்தின் படி ஒரு குற்றத்திற்காக ஒருவர் ஒரு தடவை மட்டுமே தண்டிக்கப்படவும், விசாரிக்கப்படவும் முடியும். இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதற்காக பலர் போர் நிறைவடைந்ததன் பின்னர் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்படுவதை ஊடகங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

மேலும் பலர் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். எனவே இதில் எதுவும் இல்லாமல் ஒரு சிலர் மட்டும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு வேண்டுமானால் விசாரிக்கவும், தண்டனை வழங்கவும் முடியும். ஆனால் மற்றைய சாதாரண போராளிகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதற்கு நாம் இணங்கவும் கூடாது.

மேலும் இவ்வாறு புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என கேட்போர். இரு தரப்பும் விசாரிக்கப்பட்டால் மாத்திரமே நல்லிணக்கம் உருவாகும் என குறிப்பிடுகின்றார்கள். அதன் மூலம் அவர்கள் உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை உருவாக்க முடியும் எனவும் கூறுகின்றார்கள்.

ஆனால் ஐ.நா சபையே கூறுகின்றது. இனப்படுகொலை போன்ற பெரும் குற்றங்கள் நடந்த நாடுகளில் அவை தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலேயே மேற்படி ஆணைக்குழுவை உருவாக்க முடியும் என. அந்தவகையில் நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை பழிவாங்கவும் இனப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் முயற்சிக்கப்படுகின்றது. என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.