நிவாரணங்களுடன் முதலாவது விமானம் இலங்கையிலிருந்து நேபாளம் நோக்கி பயணமானது
நேபாளத்தில் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களுடன் முதலாவது விமானம் இன்று அதிகாலை புறப்பட்டுச்சென்றது.
இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற குழுவில் 4 வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட 44 இராணுவ உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளது. மருத்துவ உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள், குடிநீ்ர் போத்தல்கள், மருந்து வகைகள் என்பனவும் நேபாளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நிவாரணக் குழுவை ஏற்றிய மேலும் 2 விமானங்கள் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதில் முப்படையைச் சேர்ந்த 14 அதிகாரிகளும் 156 உறுப்பினர்களும் நேபாளத்திற்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமையவே இராணுவ மருத்துவக் குழு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க இலங்கை அரசாங்கம் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேபாள மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிவாரணப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோர் தலைமையில் விசேட குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுடன், இலங்கை மக்கள் இணைந்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலைமையின்கீழ் நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக நேபாளத்திற்கான இலங்கை தூதுவர் டபிள்யூ.எம்.செனெவிரத்ன கூறியுள்ளார்.