Breaking News

மஹிந்த அரசாங்கத்தின் மோசடிளை அம்பலப்படுத்துகிறது புதிய அரசாங்கம்

தெற்கு அதிவேக வீதியை ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறை வரை நீடிப்பதற்கென கலந்தாய்வு செயற்பாடுகளில் ஒரு கிலோ மீற்றருக்கு மாத்திரம் 124 மில்லியன் ரூபா கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

மேலும் லுனுகம்வெஹர - கதிர்காமம் வீதியில் ஒரு கிலோ மீற்றருக்கு 255 மில்லியன் ரூபாவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கேகாலையில் அமைக்கப்பட்ட மாற்று வீதியின் கிலோ மீற்றர் ஒன்றிற்கு 722 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாற்று வீதியில் இன்னும் மண்சரிவு ஏற்படுவதாக அவர் கூறினார்.  இந்த நிதி மோசடியை மூடி மறைக்க பலரும் முனைவதாக கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.  ´இது பூமியை பிளக்கும் குற்றம்´ என்று கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார். 

வீரகெட்டியவில் வீதி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அதற்கு அனுமதி பெறவில்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் ´கொமிஷன்´ பெறும் முறை இல்லை என்பதால் ராஜபக்ஷ பிரிவு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். 

முன்னைய அரசாங்கம் போன்று தமக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு வேலைத் திட்டங்களை வழங்க புதிய அரசாங்கம் தயாரில்லை என்றும் அனைத்து திட்டங்களும் ´டென்டர்´ கோரப்பட்டே வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறு இன்றேல் நிதி ஒழுக்கத்தை பேண முடியாது என்றும் 2014 ஆண்டில் இலங்கையில் அதிக நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட 333 பில்லியன் ரூபாவில் சுமார் 200 பில்லியன் வீண் செலவானதாகவும் அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கத்தில் பெருந்தெருக்கள் அமைச்சுக்குப் பொறுப்பானவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்ததால் முழு மோசடிக்கும் அவரே பொறுப்புக் கூற வேண்டும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.