மீனவர் பிரச்சினையில் மோடி தலையிட வேண்டும்! கருணாநிதி வலியுறுத்து
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை காணுமாறு வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை என்று தான் தீருமோ? இலங்கை மீனவர்களோடு இந்திய மீனவர்கள் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேசும்போது பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று தோன்றிய போதிலும், மீனவர்களின் துன்பங்கள் தொடர் கதையாகவே நீடிக்கின்றன.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, படகுகளுடன் சிறை பிடிக்கப்படுவது, மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடி கருவிகளையும், வலைகளையும் பறிமுதல் செய்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நின்றபாடில்லை.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து 37 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்த போது, இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, 37 தமிழக மீனவர்களையும் சிறை பிடித்து, அவர்களுடைய விசைப்படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
கடந்த மாதம் 24ஆம் திகதி 9 மணி நேரம் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
இலங்கை மீனவர்களிடம் தமிழக மீனவர்களின் சார்பில் இலங்கை கடல் பகுதிக்குள் ஆண்டுக்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி உள்ளிட்ட ஏழு அம்சக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகள் குறித்து அரசு பிரதிநிதிகளுடன் இலங்கை மீனவர்கள் விரைவில் பேசி மே மாதம் முடிவுகளை தெரிவிப்பது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டதாக் செய்தியும் வந்தது. இலங்கை சிறையிலிருந்து 54 தமிழக மீனவர்கள் விடுதலையாகி தமிழகம் வந்தனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'இந்தியாவுடன் இலங்கைக்கு இருக்கும் நீண்ட கால நட்புறவுகள் பாதிக்கப்படாத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று தெரிவித்திருக்கும் கருத்து நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது.
என்றாலும், மத்திய அரசு குறிப்பாக நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி நமது மீனவர்களின் நெடுங்கால பிரச்சனைகளில் கவனத்தை செலுத்தி, உடனடியாக இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளையும், தமிழக அரசினரையும், அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன் தொடர்ச்சியாக, இலங்கை ஜனாதிபதியிடம் நேரடியாக பேசி, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை கண்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








