கிணற்று நீரில் ஒயில் மட்டுமல்ல: அரசியலும் கலந்துள்ளது
தமிழர்கள் தமக்கென ஒரு சாதனையைப் படைக்க முடியாமைக்குக் காரணம் என்ன? என்பது பற்றி டாக்டர் மு.வரதராசனார் ஓர் ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வின் பெறுபேறாக போட்டி, பொறாமை, காட்டிக் கொடுத்தல் என்ற மூன்று கயமைகளுமே தமிழர்களின் பின்னடைவுக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.
டாக்டர் மு.வரதராசனார் திருக்குறளுக்கு பொருள் எழுதியவர். மிகச் சிறந்த தமிழ் அறிஞர். அவரின் ஆய்வு முடிவுகள் தமிழகத்துக்குப் பொருந்துமோ இல்லையோ நமக்குத் தாராளமாகப் பொருந்தும். தமிழர்களாகிய எங்களிடம் ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
இப்போது கூட, சுன்னாகம் பகுதியில் கிணற்று நீரில் கலந்த கழிவு ஒயில் என்ற விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளதா? இல்லையா என்ற உண்மையை வெளிப்படை யாகக் கூறுவதற்குக் கூட எங்களிடம் ஆளில்லாத அவலநிலை ஏற்பட்டுவிட்டது.
ஒரு தரப்பு கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளது. இதனால் அந்த நீரைப் பருகுவது மற்றும் புறச் சுத்தத்திற்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிறது. இன்னொரு தரப்பு ஐயோ! கிணற்று நீரில் ஒயில் கலந்திருந் தாலும் உடல் நலத்திற்கு எந்தக் கேடுமில்லை என்று வாதிடுகிறது.
இதில் அதிசயம் என்னவெனில், இரண்டு தரப்புமே ஆய்வு அறிக்கைகளை தமது வாதத்திற்கான நியாயப்பாடுகளாக முன்வைக்கின்றன. எனினும் பொதுசனங்கள் எந்த ஆய்வு அறிக்கையையும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இதில் இன்னுமொரு வேடிக்கையும் வேதனையும் என்னவெனில் இரண்டு தரப்பிலும் மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதுதான்.
கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளது. இது ஆபத்தானது என்று கூறுகின்ற தரப்பில் இருக்கின்ற மருத்துவர்களும், சுன்னாகம் கிணற்று நீரில் ஒயில் கலக்கவில்லை அல்லது சில கிணறுகளில் ஒயில் கலந்திருந்தாலும் அதனால் உடல் நலத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறுகின்ற தரப்பிலும் இருக்கக் கூடிய மருத்துவர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உருவானவர்கள் என்ற செய்தியையும் இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.
வடபுலத்தில் நடந்த மிகமோசமான யுத்த சூழ்நிலையின் போது கூட மருத்துவர்கள் இப்படியானதொரு பேதப்பட்ட கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. வைத்தியசாலை மட்டத்தில்-நிர்வாக ரீதியான விடயங்களில் மருத்துவர்கள் முரண்பட்டதான பதிவுகள் இருந்தாலும் சுன்னாகம் கிணற்று நீரில் கலந்த கழிவு ஒயில் என்ற விடயத்தில் எங்கள் மருத்துவர்கள் கன்னை பிரிந்து நின்று கருத்து வெளியிடுவதைப் பார்க்கும்போது இறைவா! எங்கள் இனத்தை எப்படி? எங்ஙனம்? காப்பாற்றப் போகிறாய் என்ற ஏக்கமே ஏற்படுகிறது.
இதற்கு மேலாக சுன்னாகம் கிணற்று நீரில் கழிவு ஒயில் என்ற விடயத்தில் அரசியலும் கலந்து விட்டது என்பதை இவ்விடத்தில் சொல்லித்தானாக வேண்டும். கிணற்று நீரில் ஒயில் கலந்த விடயத்தில் அரசியலும் கலந்து போனதால் எதிர்கால நிலைமை மோசமான தாகவே இருக்கும்.
கிணற்று நீரில் கலந்த ஒயிலை பிரித்து எடுக்கலாம். ஒயிலில் இருக்கக் கூடிய ஆபத்தான பதார்த்தங்களை உடைத்து எடுக்கலாம். ஆனால் அரசியல் கலந்த கிணற்று நீர் விவகாரத்தை பிரித்து எடுப்பது என்பது முடியாத காரியம் என்பதால், எமது எதிர்காலம் போர்க்குற்ற விசாரணையோ, இனப்பிரச்சினைக்கான தீர்வோ, போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வோ அல்ல; கிணற்று நீரில் கலந்த ஒயில் என்பதே எங்களின் பேசுபடு பொருளாக இருக்கும்.








