Breaking News

ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான்.

இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான். இதில் எதிர்ப்பைக் காட்டும் எவரும் முழுநேர செயற்பாட்டாளர்கள் இல்லைத்தான். ஆனாலும், இலங்கைத் தீவின் வயதால் மிக இளைய ஒரு மாகாண சபைக்கு வந்த ஒரு முக்கிய சோதனையாக இதைக் குறிப்பிடலாம்.

இன்று இக்கட்டுரையானது குடிநீரில் என்ன கலந்துள்ளது என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கப்போவதில்லை. அது துறைசார் நிபுணர்களின் ஆய்வுக்குரிய ஒரு பரப்பாகும். ஆனால், பொது உளவியலைக் கருதிக் கூறின் குடிநீரில் ஏதோ கலந்திருக்கிறது என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டால் அதை நிபுணர்களால் மட்டும் நீக்கிவிட முடியாது. விஞ்ஞான விளக்கங்களினாலும் நீக்கிவிட முடியாது. வழமையாக நாங்கள் குடிக்கும் நீரில் எறும்பு மிதக்கிறது என்று கண்டாலே பலரும் அதை அருந்த விரும்புவதில்லை. குறிப்பாக குடிநீரில் மண்ணெண்ணெய் நெடி போன்ற ஏதோ ஒரு இரசாயன நெடி வீசுமாக இருந்தால் யாரும் அதை அருந்தத் துணியார். இப் பொது உளவியலை கவனத்தில் எடுத்தே இப்பிரச்சினை அணுகப்படவேண்டும். அப்படி அணுகப்படும் போது அதைத் தனியாக நிபுணர்கள் மட்டும் செய்ய முடியாது. அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைந்த ஒரு கூட்டுச் செயற்பாட்டால் மட்டுமே அத்தகைய ஒரு பொது உளவியலைக் கையாள முடியும். இந்த அடிப்படையில் இக்கட்டுரையானது இது தொடர்பில் இரண்டு பிரதான கேள்விகளை முன்வைக்கின்றது.

முதலாவது – நிபுணர்குழு அறிக்கையின் படி நீரில் மாசு ஏதும் இல்லையெனில் அதை பொதுமக்கள் அருந்தலாமா இல்லையா?

இரண்டாவது கேள்வி – நீரில் கெடுதியான மாசுக்கள் எதுவும் இல்லையென்றால் பிறகு எதற்கு சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நன்னீர் விநியோகம் செய்ய வேண்டும்?

அதாவது, நிபுணத்துவ அறிவு, விஞ்ஞான விளக்கம் எல்லாவற்றுக்கும் அப்பால் பொதுசன உளவியலைப் பொறுத்தவரை நீரில் ஏதோ இருக்கிறது என்ற ஓர் அபிப்பிராயம் பரவலாகி வருகிறது என்பதே இங்குள்ள கள யதார்த்தமாகும். இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் இக்கட்டுரையானது இந்த விவகாரத்தை இரண்டு முனைகளில் அணுக முற்படுகின்றது.

முதலாவது – ஆட்சி மாற்றத்தின் பின்னரான புதிய அரசியற் சூழலில் தமிழ் மாகாண சபைகளின் நிலைமை.

இரண்டாவது – ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கும் தமிழ் சிவில் வெளியை செயற்பாட்டு இயக்கங்களும் சிவில் அமைப்புக்களும் எவ்வாறு கையாண்டு வருகின்றன என்பது பற்றியது. இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது, ஆட்சிமாற்றத்தின் பின்னரான தமிழ் மாகாணசபைகளின் கள நிலவரம்.

இரண்டு மாகாண சபைகளுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றில் வடக்குக் கிழக்கில் இப்படிப்பட்ட சிவில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை எனலாம். இரண்டு ஆளுனர்களுமே முதிர்ச்சியும் அனுபவத் திரட்சியும் மிக்க மூத்த நிர்வாகிகளாகும். அவர்கள் இரண்டு பேருடைய இறந்தகாலமும் அனைத்துலக சமூகத்தை கவரத்தக்கவையாகும். தமிழ் மாகாண சபைகள் முன்னெப்பொழுதும் இத்தகைய சிநேகபூர்வமான சிவில் ஆளுநர்களைப் பெற்றதில்லை. இதனால், ஆட்சி மாற்றத்தின் பின் வடக்குக் கிழக்கில் மாகாண நிர்வாகம் தடைகள் ஏதுமின்றி இயங்க முடியும் என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாகக் கட்டிஎழுப்பப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல்களை ஆரம்பிக்கலாம் என்று நம்பும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் ஆட்சி மாற்றத்தின் பின் துடிப்பாக இயங்கத் தொடங்கிவிட்டார்கள். லிபரல் ஜனநாயகவாதிகளாகத் தோன்றும் சிங்கள ஆய்வாளர்கள் பலரும் பதின்மூன்றாவது திருத்தத்தைப் பலப்படுத்துவது பற்றி உரையாடத் தொடங்கிவிட்டார்கள். இத்தகையதொரு பின்னணியில் ஆளுநர்களை மாற்றுவதன் மூலம் மாகாண கட்டமைப்பை அதிகபட்சம் சிவில் பரிமாணம் உடையதாக மாற்றி அதன் மூலம் 13ஆவது திருத்தத்தைப் பலப்படுத்துவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

உண்மையில், ஆளுநர் ஒரு கருவி மட்டுமே. பிரச்சினை அவரல்ல. பிரச்சினையாக இருப்பது மாகாண கட்டமைப்புதான். அது ஒரு கோறையான கட்டமைப்பு. அதுதான் இப்பொழுதும் இருக்கிறது. வட மாகாண முதலமைச்சர் அதை இப்பொழுது அடிக்கடி கூறி வருகிறார். எனவே, ஆட்சி மாற்றத்தின் பின் மாகாண கட்டமைப்பானது பலப்படுத்தப்பட்டுவிட்டது போல ஒரு தோற்றம் காட்டப்படுகிறது. இந்த அடிப்படையில் சுன்னாகம் கழிவு எண்ணெய் பிரச்சினையும் மாகாண நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒன்றாகவே காட்டப்படுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட பகுதி நேரச் செயற்பாட்டாளர்கள் இது தொடர்பாக மத்திய அரசிடம் உரையாடச் சென்ற போது அங்கே அவர்கள் இன்முகத்தோடு வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். எந்த மத்திய அமைச்சர் மாற்றத்திற்கு முன்பு கழிவு எண்ணெய் பிரச்சினையைக் கண்டும் கேளாமலும் இருந்தாரோ அவரே மாற்றத்தின் பின் சூழலியலாளராக மாறி குறிப்பிட்ட மின்சார உற்பத்தி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தைப் பெறுவதை இடை நிறுத்தினார். அண்மையில் கூட மற்றொரு மத்திய அமைச்சர் சுன்னாம் நீரில் மாசு உண்டு என்று அறிவித்திருந்தார். அதாவது, மத்திய அரசு இந்தப் பிரச்சினையை பரிவுடன் செவிமடுப்பது போலவும் உடனடியாக தீர்வுக்கு வரத் தயாராக இருப்பது போலவும் ஒரு தோற்றம் காட்டப்படுகிறது. அதேசமயம் சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர்கள் மாகாண சபையை அணுகியபோது தாங்கள் அதிகம் வரவேற்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் மாகாணசபை ஊழியர்களாக இருப்பதினால் மாகாண சபையானது விவகாரத்தை ஒரு நிர்வாகப் பிரச்சினையாக பார்ப்பதாகவும் அவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். எனவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்புடன் இருப்பதுபோலவும் மாகாண நிர்வாகமே பொறுப்பின்றி நடந்துகொள்வது போலவும் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆயின், இந்த இடத்தில் மாகாண சபை சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கின்றது. இந்த விவகாரம் மாகாண சபையின் அதிகார வரப்பிற்கு உட்பட்ட விவகாரமா? இதைக் கையாள்வதற்குத் தேவையான நிபுணத்துவ வளமும், நிதிப்பலமும் மாகாண சபையிடம் உண்டா? அத்தகைய வளங்களும், பலங்களும் இருக்குமிடத்தில் இப்பிரச்சினை ஏன் இழுபட வேண்டும்? அல்லது இந்த விவகாரத்தை தந்திரமாகக் கையாள்வதன் மூலம் மாகாண சபையையும் வாக்காளர்களையும் மோதவிட முயற்சிகள் நடக்கின்றனவா?

அப்படியான உள்ளோட்டங்கள் ஏதும் திரைமறைவில் இருந்தால் இப்போதுள்ள நிலைமைகளின் படி கூட்டமைப்பினால் அதை வெளிப்படையாக உரையாட முடியாது. ஏனெனில், மாற்றத்தின் பங்காளிகளாகக் காணப்படும் அவர்கள் அந்த மாற்றமே தங்களையும் மக்களையும் மோதவிடும் ஒரு நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி வெளிப்படையாக உரையாட முடியாது. ஆனால், இந்த விவகாரம் இப்படியே தொடர்ந்து நீடித்தால் அது கூட்டமைப்பின் வாக்கு வங்கியைப் பாதிக்கக் கூடிய வளர்ச்சியைப் பெறக்கூடும்.

இதில் சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர்களில் முக்கியமானவர்களுள் சிலர் மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட மருத்துவர்களாகக் காணப்படுகின்றார்கள். எனவே, தனது நிர்வாகத்தின் கீழ்வரும் மருத்துவர்களோடு ஒரு வெளிப்படையான மனந்திறந்த உரையாடலை நடாத்த ஏன் மாகாண சபையால் முடியவில்லை? ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மாகாண சபைக்கு மகத்தான ஒரு வெற்றியைப் பெற்றுத்தந்த வாக்காளர்களோடு மனந்திறந்து உரையாடி அவர்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களைப் போக்க இவ்வளவு தயக்கமும் தாமதமும் ஏன்?

மாகாண சபைகளிலேயே வயதால் மிக இளைய மாகாண சபையானது தனது மக்களோடு முரண்படும் ஒரு நிலைமையானது ஆட்சி மாற்றத்தின் உடனடி விளைவுதான். இந்தப் பிரச்சினை வட மாகணசபை உருவாக முன்னரே இருந்த ஒன்றுதான். இது ஆட்சி மாற்றத்திற்கு முன்னரே ஒரு விவகாரமாக வந்திருந்தால் பழி முழுவதையும் ராஜபக்‌ஷ அரசின் மீது போட்டுவிட்டு மாகாண சபை தப்பியிருந்திருக்கலாம். ஆனால், மாற்றத்தின் பங்காளிகளான பின் அவர்களால் அதைச் செய்ய முடியாது. அதாவது, மாற்றத்தின் விளைவுகள் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றனவா? இது முதலாவது. இரண்டாவதாக, இந்த விவகாரத்தைச் செயற்பாட்டாளர்கள் எவ்வாறு கையாண்டு வருகின்றார்கள் என்பது பற்றியது.

ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் சிவில் வெளியானது ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. ஆனால், அது குழப்பம் மிகுந்ததாகவும் கலங்கலானதாகவும் உள்ளூர் தலைமைத்துவங்கள் போதியளவு வளர்ச்சிபெறாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினையில் அதிகம் அக்கறை காட்டியவர்களுள் மருத்துவர்களும் அடங்குவர். 

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிவில் செயற்பாட்டாளர் மூன்று மாதங்களுக்கு முன் இக்கட்டுரை ஆசிரியரிடம் கேட்டார், “மருத்துவர்கள் ஏன் இவ்வளவு முனைப்பாக இந்தப் பிரச்சினையில் தலையிடுகிறார்கள்?” என்று. இந்தப் பிரச்சினையின் விளைவுகள் உடனடியாக மருத்துவத் துறைக்குரியவை என்பதால் அவர்கள் தலையிடுகிறார்கள் போலும் என்று நான் சொன்னேன். அவர் திரும்பக் கேட்டார் “எமது சமூகத்தில் மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபடுவது குறைவு. அவர்கள் தங்களுக்குரிய பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி களத்தில் குதிப்பது குறைவு. ஆனால், இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் ஈடுபாடு கவனிப்புக்குரியதாகக் காணப்படுகின்றது” என்று.

யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தரவர்க்கத்தின் பொதுப் பண்புகளுக்கு ஊடாகச் சிந்தித்து கேட்கப்பட்ட கேள்விகள் அவை. படித்த நடுத்தர வர்க்கமானது தனது நிலையான நலன்களை இழந்து ஒரு கட்டத்திற்கு மேல் போராடத் துணிவதில்லை. இந்தப் போராட்டம் தொடர்ச்சியற்று இருப்பதற்கும் போராடும் தரப்பினர் பல கூறுகளாகச் சிதறிக் கிடப்பதற்கும் எல்லாவற்றையும் விட முக்கியமாக எல்லாத் தரப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுத் தலைமை உருவாக முடியாமல் இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்தான்

இதில் சம்பந்தப்பட்ட பலரும் அரைச் செயற்பாட்டாளர்களே. அதாவது, இதில் முழு நேரமாகச் செயற்படுபவர்கள் அல்ல. இதுதான் இந்தப் போராட்டத்தின் அடிப்படை பலவீனங்களில் ஒன்று. இப்போராட்டத்தில் மட்டுமல்ல, இது போன்று மாற்றத்தின் பின்னர் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் எந்தவொரு சமூகச் செயற்பாட்டிலும் முழுநேர உழைப்பாளிகளைக் காண முடிவதில்லை. அதாவது, தமிழ்ச் செயற்பாட்டு வெளி அல்லது சிவில் வெளி என்பது மிகவும் வினைத்திறன் குன்றியதாகவே காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக படைத்துறை மயப்பட்டுவந்த ஒரு சமூகமானது அதன் சிவில் அடிப்படைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் பல்வகைமைப் பண்புகளையும் கட்டி எழுப்புவதில் மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பெரிய ஊர்வலத்திற்குப் பின்னாலும் இது போன்ற கேள்விகள் உண்டு. மாற்றத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பு மாற்றத்தை ஆதரித்து அறிக்கைவிட்டவர்களே மாற்றத்தின் பின் அந்த மாற்றத்தின் விளைவை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் செய்யவேண்டியதாயிற்று. அதாவது, தமிழ் சிவில் செயற்பாட்டு வெளியானது இன்னும் முதிரவேண்டியிருக்கிறது என்பதையே அது காட்டுகிறது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஒப்பீட்டளவில் அதிகரித்த சிவில் வெளியை வெற்றிகரமாக கையாளவல்ல செயற்பாட்டு இயக்கங்களை அரங்கில் காணமுடியவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளூர் மட்டத்தில் அரசியல் தலைவர்கள் எழுச்சிபெற்ற அளவிற்கு செயற்பாட்டாளர்கள் எழுச்சிபெறவே இல்லை. தமது அரசியல் இலக்குகளுக்காக உயிரைத் துறந்து சொத்துக்களைத் துறந்து போராடத் தயாராக இருந்த ஒரு மக்கள் கூட்டம் பகுதி நேரச் செயற்பாட்டாளர்களின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பின்னாலும் செல்லும் ஒரு நிலை தோன்றியுள்ளது.

படித்த கல்வீட்டுத் தமிழர்களை அதிகமாகக் கொண்ட யாழ்ப்பாணத்துச் சமூகமானது தனது குடி நீரில் என்ன கலந்துள்ளது என்பதைக் குறித்து தீர்க்கமான முடிவுகளுக்கு வர முடியாது தத்தளிக்கின்றது. ஈழத்தமிழர்களின் ஏறக்குறைய நாலில் ஒருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பல்வேறு துறைகளிலும் உலகத்தரத்தில் பிரகாசிக்கும் துறைசார் வல்லுனர்கள் பலரும் காணப்படுகின்றார்கள். உலகு பூராகவும் பரந்து காணப்படும் தமிழ் நிபுணர்களை ஒன்று திரட்ட இது ஒரு அருமையான சந்தர்ப்பம். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்திற்கு எப்படி உதவலாம் என்ற பொறிமுறை குறித்துச் சிந்திப்போருக்கு இது ஒரு பொருத்தமான பிரயோகக் களம்.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்த மனந்திறந்து உரையாடினால் பிரச்சினையின் வேர்களை தெளிவாக அடையாளம் காணலாம்.

அதாவது, சுன்னாகம் நீர்ப்பிரச்சினை எனப்படுவது நீரில் கலந்திருப்பதாகக் கருதப்படும் கழிவு எண்ணெய் பற்றியது மட்டுமல்ல. அது வயதால் மிக இளைய ஒரு மாகாண சபையின் வினைத்திறனுக்கு வந்த ஒரு சோதனை மட்டுமல்ல. கடந்த ஆறு ஆண்டுகால தமிழ்ச் சூழலில் செயற்பாட்டு இயக்கங்கள் உரிய வளர்ச்சியை பெறத்தவறிய ஒரு வெற்றிடத்தை வெளிக்கொண்டுவந்த ஒரு பிரச்சினையும்தான்.

 -நிலாந்தன்