Breaking News

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எண்ணமில்லை: மகிந்த

தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெதிகம விகாரையில் நேற்று இடம்பெற்ற பூஜைகளில் கலந்துக்கொண்ட பின்னரான மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை உண்டு பண்ணக்கூடிய விளைச்சல்களின் விலை குறைந்துள்ளது இதுவா நல்லாட்சி என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நல்லாட்சியை குறித்து இன்று மக்கள் விடுதலை முன்னணி பேசுகின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியில் எத்தனை நல்லாட்சிகாரர்கள் இருக்கின்றார்கள் என அவர் கேட்டுள்ளார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுவிடுவேன் என நினைத்து புதிய சட்டங்களை உருவாக்குகின்றார்கள். எனினும் நான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி பணத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்துள்ளார்கள்.

காவி உடையை பகிர்ந்தளிப்பது தவறா? அரசாங்க ஊழியர்கள் எதிர்வரும் காலங்களில் தமது கடமையை செய்வதற்கும் அஞ்ச வேண்டிய நிலை நாட்டில் காணப்படுகின்றது. ஏனெனில் அதுவும் ஊழல் என கூறி அவர்களையும் நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துவிடக்கூடும். அப்பாவிகளான எங்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும்.

எனக்கு மாளிகை வேறு சிறைச்சாலை வேறல்ல எல்லாம் பழக்கப்பட்ட ஒன்றுதான். தற்பொழுது இடம்பெறுகின்ற வெறுப்பு அரசியலை நிறுத்திவிட்டு இரக்கத்தை விதைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.