Breaking News

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வரும் புதன்கிழமை யாழில் ஆர்ப்பாட்டம்

வடமாகாண வேலையற்ற பட்ட தாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (29) முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. 

இந்த ஆர்பாட்டத்திற்கு வடமாகாணத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேலையில்லா உள்வாரி, வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரையும் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் த. பிரதாபன் அறிவித்தல் விடுத்துள்ளார். 

2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பிற்கு உள்ளீர்ப்பது பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்ததுடன் கடந்த கால தேர்தல்களின் போது பட்டதாரிகள் அரசேவையில் உள்ளீர்க்கப்படுவார்கள் என வடபகுதி அமைச்சர் ஒருவரினால் போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்தனர். 

இந்த நிலையில் வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து வேலையில்லா பட்டதாரிகளினால்; சுயமாக எவ்வித அரசியல் சாயமும் இல்லாமல் கடந்த தை மாதம் 21.01.2015 அன்று ஒன்றுகூடி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்பை அடுத்து வேலையில்லா பட்டதாரிகள் சமூகம் என்ற அமைப்பை தோற்றுவித்து நிர்வாக கட்டமைப்பையும் தெரிவு செய்திருந்தனர். இதனையடுத்து குறித்த நிர்வாகத்தினால் வேலையில்லா பட்டதாரிகளின் விபரம் பாட ரீதியாக திரட்டப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபையிடமும் கையளிக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கினைப்புக் குழு கூட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. 

இதன்போது ஜனாதிபதி குறித்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் வடமாகாண சபைக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் விபரம் கையளிக்கப்பட்டு பட்டதாரிகளுக்கான வேலைவாய்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏகமனதாக அங்கு நிறைவேற்றப்பட்டது. அடுத்து வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் பட்டதாரிகள் சமூகத்தினால் சேகரிக்கப்பட்ட தரவு சமர்ப்பிக்கப்பட்டு வேலைவாய்ப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந் நிலையில் பலதரப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் தரவுகளுடன் முன்வைக்கப்பட்ட போதும் இது வரை எவ்வித பதிலும் அவர்களினால் வழங்கப்படாத நிலையிலேயே எதிர்வரும் புதன்கிழமை தாம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.