மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவர் இணக்கம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கையின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 24ம் நாள் விசாரணைக்கு முன்னிலையாகும்படி, இலங்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட விவகாரம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நாடாளுமன்றத்தில் நடுவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்தநிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் பாலபத்தபென்டியை சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்துக்கு அழைத்து பேசினார். மகிந்த ராஜபக்சவின் இருப்பிடத்துக்குச் சென்றே அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்கு ஆணைக்குழுவின் தலைவர் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்ததாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
எனினும், இதுஅதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று சபையில் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் போது, புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாகவும், ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித் துள்ள தாகவும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.








