Breaking News

பாராளுமன்றத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - பிரபா கணேசன்

19வது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பொழுது அனைவரும் அணிதிரண்டு வாக்களித்தோம். வாக்களிப்பின் பின் திருத்தங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது திருத்த பிரதிகளில் சிங்களமும் ஆங்கிலமும் மட்டுமே இருந்தன. 

இதனை சபையில் சுட்டிக்காட்டிய பொழுது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரக்குறைவான வார்த்தைகளை எனக்கு எதிராக பிரயோகித்ததன் மூலம் தமிழ் மக்களின் மொழி உரிமைகளுக்கு எதிராக செயல்படுகின்றார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று (29) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

19வது திருத்த சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் தனது அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு முழு சம்மதத்தையும் தெரிவித்திருந்தார். 

இருப்பினும் பாராளுமன்றத்திற்கு வழங்கவிருந்த அதிகாரங்களை கபடமான முறையில் பிரதமருக்கு கிடைக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்ட பொழுது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களாகிய நாங்கள் அதனை நிராகரித்து பல திருத்தங்கள் அதில் உள்வாங்கப்பட்டு அதன் பின்பு ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதற்கு நாங்கள் அனைவரும் அணிதிரண்டு வாக்களித்து நிறைவேற்றினோம். இருப்பினும் நாங்கள் உள்வாங்கிய திருத்தங்களின் பிரதியை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்காமல் இன்றைய அரசாங்கம் அதனை நிறைவேற்ற முயற்சித்தது. இது சபை நடவடிக்கைகளுக்கு முரணானது என்பதனால் திருத்தங்கள் அடங்கிய பிரதியை அனைத்து மொழிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என சபாநாயகர் பாராளுமன்றத்தை சில நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். 

மீண்டும் பாராளுமன்ற அமர்வின் போது திருத்தங்களின் பிரதிகள் வெறுமனே சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே இருந்தன. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நான் உட்பட டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் போன்றோர் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம். நான் எழுந்து எமது சிறப்பிபுரிமையைப் பற்றி பேசிய பொழுது நாகரிகமற்ற வார்த்தைககளால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசினார். 

அதே போல் பகலில் தமிழராகவும் இரவில் சிங்களவராகவும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன் ஆங்கிலம் புரியாவிட்டால் மொழிபெயர்ப்பு கருவியை காதில் மாட்டிக் கொள்ளுமாறு தெரிவித்தார். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி அறிவு என்னிடம் இருந்தாலும் கூட பாராளுமன்றத்திற்குள்ளே இருக்கும் அனைத்து ஆவணங்களும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதையே நான் சுட்டிக் காட்டினேன். 

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆங்கிலத்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேவைப்படும் பொழுது அங்கே தமிழ் இருக்க வேண்டும் பாராளுமன்ற நேரம் தாமதமாகிவிடும் என்ற எண்ணத்தில் அங்கே தமிழில் பிரதி தேவையில்லை என்று சொல்கின்றார்கள். இது தான் தமிழ் தேசியமா? 

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜால்ரா போடுவதை தான் இன்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நல்லாட்சியை ஏற்படுத்திய தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வினை நோக்கி இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் எதனையும் செய்யவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் கல்வி அபிவிருத்தி வடகிழக்கு மலையகம் போன்ற பகுதிகளில் சுகாதார அபிவிருத்தி போன்ற எதனையுமே கணக்கில் எடுக்கவில்லை. 

கடந்த ஆட்சிக் காலத்திலே அகற்றப்பட்ட கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவில் போன்ற பல விடயங்களை அறிக்கையாக்கி ஊடக விளம்பரம் பெற்றவர்கள் மீண்டும் தாங்கள் எழுதிய பழைய ஊடக அறிக்கைகளை தூசிதட்டி அவர்கள் உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக செய்து முடிக்க வேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு நண்பன் என்ற மாயையை எப்பொழுதும் ஏற்படுத்தி வருகின்றார். இவர் கருணாவை பிரித்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இல்லாதொழித்தது போன்று முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவையும் பிரித்தெடுத்தது சிறுபான்மை மக்களின் போராட்டங்களை சிதைத்துள்ளார். 

இவரது உண்மையான முகத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் ஒரு முறையாவது தமிழ் மொழி புறக்கணிக்கப்படுமாயின் அது தொடர்ச்சியாக இடம்பெற்று விடும். இதனை அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இவ்வாறு பிரபா கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.