புதுவருடத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் - சுசில்
தமிழ், சிங்கள புதுவருடத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 14 கூட்டணி கட்சிகளுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தையின் பின்னர் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பது குறித்து அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவுசெய்யும் பொறுப்பினை சபாநாயகர் சாமல் ராஜபக்ச என்னிடம் ஒப்படைத்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
புத்தாண்டின் பின்னர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் பெயரை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதனை திட்டவட்டமாக கூறமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








