Breaking News

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன- மைத்திரி

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருக்கினறார்.

நாட்டில் ஊழல்களை ஒழித்துக் கட்டி, ஜனநாயகத்தையும் உண்மையான சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்தும் நிறைவேற்றப் போவதாக தமது நூறு நாள் ஆட்சிக்கால நிறைவு நாளாகிய வியாழக்கிழமை உறுதியளித்திருக்கின்றார்.

நாட்டில் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் நம்பிக்கை,சகவாழ்வு, ஐக்கியம் என்பவற்றை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதேபோன்று அயல் நாடாகிய இந்தியா மற்றும் சீனா, பாகிஸ்தான், பிரித்தானியா ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் நம்பிக்கையையும் புதிய அரசாங்கம் வென்றெடுத்திருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

முன்னைய அரசாங்கத்தில் தொலைபேசிகளில் உரையாடுவதற்கு அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் அச்சம் கொண்டிருந்தார்கள். தமது உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக அவர்கள் அஞ்சியிருந்தார்கள். ஆனால் புதிய அராசங்கத்தில் நிலைமைகள் அப்படியில்லை. மக்கள் சுதந்திரமாக இருக்கின்றார்கள். ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன. நீதிமன்றங்களில் எந்தவிதமான தலையீடுகளுமின்றி நீதிபதிகளும் சுதந்திரமாகச் செயற்படுகின்றார்கள் எனக் கூறிய அவர், இந்த சுதந்திரத்தை சில ஊடகங்கள் ஏன் பிழையான வழியில் பயன்படுத்துகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஊழல்கள் ஒழிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் நாட்டின் எதிர்கால சுபிட்சத்திற்காக அரசியல், பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு என்பவற்றில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நிறைந்த நடவடிக்கைகளை சிலர் தவறான கண்கொண்டு பார்க்கின்றார்கள் என சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய போக்கைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னைய தேர்தல்களில் தமது ஆட்சியின்போது மாற்றங்களைக் கொண்டு வருவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறிய எவரும் தாங்கள் உறுதியளித்தபடி தமது ஆட்சியின்போது மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது, தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற விடயங்களில் உண்மையாகவே மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் நினைவூட்டினார்.

மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு, இப்போது சுதந்திரமாக வாக்களிக்கின்ற நிலைமையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் நன்மைகளையும் கருத்திற்கொண்டு செயற்பட முன்வரவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.