Breaking News

சுஷ்மா - மீனவர்கள் இடையே சந்திப்பு

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். 27ம் திகதி இந்த சந்திப்பு நடக்கிறது. 

தமிழக மீனவர்கள் இந்திய–இலங்கை எல்லை கடல் பகுதியில் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், மத்திய–மாநில அரசுகளின் உதவியை நாடினர். 

மீனவர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய ஜனாதிபதி பதவியேற்ற சிறிசேன இந்திய பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் சந்தித்து பேசினர். இதனால் இனி தாக்குதல் இருக்காது என கருதிய நேரத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்ந்ததால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். 

மேலும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடித்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறைபிடிக்கப்படுவது உறுதி என இலங்கை ஜனாதிபதி சிறிசேனவும் அறிவித்தார். 

இந்த சூழ்நிலையில் தமிழக–இலங்கை மீனவர்கள் சந்திப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய, இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மட்டும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. 

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்திக்க தமிழக மீனவ பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது மீன்படி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. 

இந்த காலத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால் தடைக்காலம் முடிந்ததும் மகிழ்ச்சியுடன் மீன்பிடிக்க செல்லலாம் என மீனவர்கள் கருதினர். இதன் அடிப்படையில் தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 27ம் திகதி சுஷ்மா சுவராஜை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. 

இதற்காக தமிழக மீனவ பிரதிநிதிகள் 150 பேர் டெல்லி செல்கின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, அல்போன்ஸ், மகத்துவம் உள்பட 26 பேர் கொண்ட குழு செல்கிறது. 

இந்தக்குழு இன்று இரவு ராமேசுவரத்தில் இருந்து ரெயிலில் புறப்பட்டு சென்னை செல்கின்றனர். அங்கிருந்து மற்ற மீனவர்கள் குழுவுடன் இணைந்து டெல்லி செல்கின்றனர். தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளர் முரளீதர ராவ், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை 27ம் திகதி சந்திக்கின்றனர். 

இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டுவது, தமிழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிக்க வழிவகை செய்வது, மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் தெரிவித்தார்.