Breaking News

சென்னையில் சுவாமிநாதன் பிரதமரின் துப்பாக்கிச்சூட்டு கதையை மீண்டும் கூறியதால் குழப்பம்!

இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி வரும் பிற நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல இலங்கை சட்டத்தில் இடம் உள்ளதாக இலங்கையின் மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னைக்குச் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

´இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகள் ஓராண்டிற்குள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரிய வசதிகள் செய்த பின் இங்குள்ள தமிழர்கள் இலங்கைக்கு அழைத்துக் கொள்ளப்படுவார்கள். 

இலங்கையில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு தனியாக பிரித்துப் பார்க்கவில்லை. இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முழுப்பொறுப்பு இந்தியாவிடமே உள்ளது. பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு இலங்கை சட்டத்தில் இடமுள்ளது´ எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே சுஷ்மா சுவராஜை சந்தித்த பிறகு செய்தியாகளிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ´மீனவர்கள் விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையே எந்த பிரச்சினையும் இல்லை. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை மீனவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது´ என்றார்.