தமிழர்களே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொன்.செல்வராசா
இலங்கை எமக்கு மட்டும் சொந்தமல்ல. இங்கு வாழ்கின்ற அனைத்து இனங்களுக்கும் சொந்தமான நாடு. இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தமிழர்களே. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தமிழர்கள்தான் கூடுதலான உத்தியோகங்களைப் பெற்றிருந் தார்கள்.
1972ஆம் ஆண்டு இந்த நாட்டிலே 'சுயபாஷா' முறை அமுல்படுத்தப்பட்டபின் நாங்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்கவேண்டியவர்களாக இருந்தோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மண்டூர் விஷ்ணு விளையாட்டுக் கழகத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா , சனிக்கிழமை (18) மாலை, கழகத் தலைவர் க.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன் செல்வராசா எம்.பி, 'கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்திலே உத்தியோகம் பார்க்கும் உரிமையற்றவர்களாக தமிழர்கள் இருந்ததனர். ஏறக்குறைய 35 வருடகாலமாக எமது இனத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டதே தவிர, எமது இன மக்கள் உரிமையுடன் வாழ்ந்தவர்களாகவோ உரிமையுடன் உத்தியோகம் பார்த்தவர்களாகவோ இருக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது' என்றார்.
'உண்மையிலே படிப்பதற்கு வசதியற்றவர்களாக பதுங்கு குழிகளில் ஒழித்துக்கொண்டு இருந்த ஓர் இனமாகத்தான் இருந்திருக்கின்றோம் என்பதை இவ்விடத்தில் சொல்லியாக வேண்டும். உண்மையான சுதந்திரம் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. ஏறக்குறைய 65 ஆண்டுகளாக தமிழர்களின் அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்தன.
இதனால் கடந்தகாலங்களில் தந்தை செல்வா அவர்களின்; தலைமையில் நாங்கள் அகிம்சையாக போரடினோம். அதன் பின்னர் ஆயுதம் மூலமாக எமது உரிமைகளை வென்றடுக்கலாம் என துணிந்தார்கள். அதுவும் 2009ஆம் ஆண்டு மௌனித்தது. அதன் பின்னர் எமக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பதை அறியும் பொருட்டு 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தான் தலைவர்கள் என்பதை எமது மக்கள் சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டினார்கள் என்று அவர் மேலும் கூறினார்.