படையினரிடம் சரணடைந்து காணாமற்போன 110 புலிகளின் விபரங்களை வெளியிட்டார் யஸ்மின் சூகா
போரின் முடிவில் இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், தளபதிகள் 110 பேரின் விபரங்களை, ஐ.நாவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த, நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தவரான, யஸ்மின் சூகா தலைமையிலான, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்- இலங்கை என்ற அமைப்பினால், இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே 18ம் நாள் இலங்க படையினரிடம் இவர்கள் சரணடைந்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், அவர்களில் பலரும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும், யஸ்மின் சூகாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த நாளில் 100இற்கும் அதிகமாக விடுதலைப் புலிகளின் இராணுவ, சிவில் நிர்வாக, தலைவர்கள் இலங்கை படையினரிடம் சரணடைந்ததை பெருமளவான சாட்சிகள் கண்டுள்ளனர். கடைசியாக சாட்சிகள் காணும் போது, இலங்கைப் படையினரின் தடுப்பில் இருந்த இவர்களில் பெருமளவானோர் காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளமுள்ளிவாய்க்கால் பாலத்துக்கு தெற்குப் பகுதியில், முள்வேலி அடைக்கப்பட்ட இலங்கை படையினரின் பகுதியில், இவர்களில் பலர், கத்தோலிக்க அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களின் பட்டியலை அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் இராணுவத்தினரிடம் சமர்ப்பித்தார். இவர்கள், பேருந்துகளில் இராணுவத்தினரால் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதை உறவினர்கள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். அவர்களும், அருட்தந்தையும், அதற்குப் பின்னர் காணப்படவில்லை.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போகச் செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் குறித்து நம்பகமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு இதற்குப் பொறுப்பானர்களைத் தண்டிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட- விடுதலைப் புலிகள் 110 பேர் தொடர்பான விபரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.