7 தமிழர்களின் விடுதலையை கௌரவ பிரச்சினையாக எடுக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழக அரசின் முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு என்பதால் ஏழு தமிழர்களின் விடுதலையை கௌரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ் கொலை வழக்கில் எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு 24 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலைக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இவ்வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டு விடுமோ? என்ற கவலையை உச்ச நீதிமன்ற அறிவிப்பு போக்கியிருக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, இவர்களையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ரோபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு கடைப்பிடித்த அலட்சியப் போக்கால் ஏற்கனவே ஓராண்டு தாமதமாகி விட்டது. எனவே, இனியும் அலட்சியமாக செயல்படாமல் அரசியல் சட்ட விஷயங்களிலும், கிரிமினல் வழக்குகளை நடத்துவதிலும் வல்லமை பெற்ற சட்ட வல்லுனர்களை கண்டறிந்து, அவர்களை தமிழக அரசின் வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பு 7 தமிழர்களின் விடுதலையை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசா ரிக்கும் வழக்குகளில் சம்பந்தப்பட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு என்பதையும் தீர்மானிக்கும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் இவ்வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு தமிழக அரசு நியமிக்க வேண்டும். அதன்மூலம் இவ்வழக்கில் அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.