Breaking News

குரு பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி? மீனம்

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி 100/ 55
தடைகள் தகரும் வெற்றி நிலைக்கும் உள்ள உறுதியுடன் உழைப்பில் ஈடுபடும் மீனராசி அன்பர்களே! குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கி வந்தார்.

அவரால் குடும்ப நலன் மேம்பட்டிருக்கும். கையில் பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் முன்னேற்றம் அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 5ல் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமானது அல்ல. 

5ல் இருந்தது போல நன்மையை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் பிற்போக்கான பலனை அவர் தர மாட்டார். பொதுவாக 6ல் இருக்கும் போது, உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனத் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. குருவின் இடம் சாதகமற்று இருந்தாலும், அவரது 9ம் பார்வை சிறப்பாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் குறுக்கிடும்தடைகளைத் தகர்த்து, வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிப்பீர்கள். 

டிசம்பர் 20ல் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அவர் அதிசாரம் ஆகிறார். அப்போது சுபம், செல்வாக்கு, பொருளாதார வளம் மேலோங்கும். சனிபகவான், ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இவரால் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. 

அந்தவகையில் சனியால் கெடுபலன் அதிகம் நேராது. மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணத்தின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் குறையும். இருந்தாலும், பணநிலை சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். யாரிடமும் வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது. குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை மேலோங்கும். 

உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமண விஷயத்தில் தடை ஏற்பட்டு விலகும். வீடு, மனை வாங்க சில காலம் பொறுத்திருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. 

ஆதாய நோக்கில் வெளியூர் பயணம் அடிக்கடி செல்வீர்கள். குருவின் 9-ம் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால், எக்காரணம் கொண்டும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட மாட்டீர்கள். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு அதிகரித்தாலும், சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம் ஆகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 

வேலையில் கவனம் செலுத்தி விட்டால், அதிகாரிகள் உங்கள் பக்கம் தலை வைக்க மாட்டார்கள். கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் பலன் கருதாமல் பாடுபட வேண்டியிருக்கும். பணவரவும் சுமார் தான். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். 

ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடப்பவர்கள்கல்வியில் சிறந்து விளங்குவர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப நற்பலன் காண்பர். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதம் ஆகும். அப்படி வாங்கினால், வில்லங்கம், பத்திரம் உள்ளிட்டவற்றை கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும். 

வழக்கு, விவகாரத்தில் தீர்ப்பை சாதகமாகப் பெற கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆடம்பர செலவைக் குறைப்பது புத்திசாலித்தனம். 

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். லட்சுமி வழிபாடு வருமானத்திற்கு வழிவகுக்கும். துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுங்கள். பவுர்ணமியன்று மலைக்கோயிலுக்குச் செல்லுங்கள்.


உங்கள் இராசிக்கு எப்படி?

மேஷம்                  இடபம்              மிதுனம்            கடகம்        

சிம்மம்                   கன்னி              துலாம்               விருட்சியம்

தனு                          மகரம்              கும்பம்               மீனம்