Breaking News

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி! சுன்னாகத்தில் பரிதாபம்!!

சுன்னாகம், மல்லாகம் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த சமயம் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் வீதியால் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் பலியாகினர். 

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றது.  சம்பவத்தில் மல்லாகம்,கல்லாரையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ரஜீவன் (வயது 29) இவரது மகனான ரஜீவன் நிருஜன்(வயது 08) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். 

காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தவேளை இருவரும் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்த சமயம் மின் வயர் அறுந்து வீழ்ந்துள்ளது. இதனால் இருவரும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மேலதிக விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மின்வயர் அறுந்தமை தொடர்பில் மின்சார சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டபோதும் அவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர்.