யுத்தக் குற்ற விசாரணைக்கு பொன்சேகா வரவேற்பு
தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க யுத்தக் குற்ற விசாரணையை வரவேற்பதாக, இலங்கையில் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக யுத்கத் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதனை உத்தரவாதத்துடன் குறிப்பிட முடியும் எனவும் பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.. மேலும் தான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் போன்றன இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறித்து தமக்கு தெரியும் எனவும் எனினும், சர்வதேச சமூகத்தின் மீதோ அல்லது ஊடகங்களின் மீதோ இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் போர் தொடுப்பது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியமானது எனவும் சரத் பொன்சேகா, மேலும் கூறியுள்ளார்.