பஞ்சணையில் கிடந்த மகிந்த பதறுவதன் காரணம் என்ன?
தனது கைது உறுதி என்பதை மகிந்த தெரிந்து கொண்டிருந்தாலும் அது எப்போது என்பது இன்னமும் தெரியவரவில்லை. இதனால் தனக்குப் பாதுகாப்பைத் தேட மகிந்த நினைத்தார்.
இதற்கான ஒரே வழி தன்னைக் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூக்குரல் இடுவது என அவர் முடிவு செய்தார் போலும்.இதன் காரணமாக தனது கைது குறித்து முன் எச்சரிக்கையாக அவர் கூக்குரலிட ஆரம்பித்துள்ளார்.
தனது கைதுக்கான காரணம் தான் செய்த ஊழல் என்பதை அவர் தெரிந்திருந்தாலும் தனது கைதைத் தடுப்பதற்கு என்ன வழி என்று சிந்தித்த மகிந்த ராஜபக், புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சி காரணமாகவேதான் கைது செய்யப்படவுள்ளதாக கூறியிருப்பதுதான் இங்கு விசித்திரமான செய்தி.
வன்னியில் நடந்த போரில் தமிழர்களைக் கொன்றொழித்ததன் காரணமாகவே தன்னைக் கைது செய்கின்றனர் என்றால் அது பொருந்தாது.மாறாக விடுதலைப் புலிகளின் சூழ்ச்சியால் என்னைச் சிறையில் அடைக்க ஏற்பாடு என்றால், புலிகளை வென்ற மகிந்தர் என்ற புகழுக்குப் பங்கம் வந்துவிடும்.
எனவே உள்ளகக் காரணங்கள் எதையும் கூறி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்த மகிந்த ராஜபக், புலம்பெயர் தமிழர்களை முன் நிறுத்துவதே பொருத்தம் என தீர்மானித்தார். இதனை அரங்கேற்ற நினைத்த அவர்,எனதருமை சிங்கள மக்களே! நான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம். புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சியால் இந்த அரசு என்னைக் கைது செய்யவுள்ளது என உரக்கக் கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் முயற்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை கைது செய்வது என்றால் அது சாத்தியமான காரியமா என்ன? ஆக, புலம்பெயர் தமிழர்களால் தனக்கு சிறை வாசம் தரப்படப் போகிறது எனக் கூப்பாடு போடுவதன் மூலம் சிங்கள மக்களின் அனுதாபங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு மகிந்த பிதற்றுகிறார்.
எதுவாயினும் மகிந்த ராஜபக்வின் காலத்தில் நடந்த கைதுகள்; சிறையில் தடுத்து வைத்தல் என அனைத்தும் நீதிபரிபாலனத்திற்குட்பட்டு நடந்தது என்றால், மைத்திரியின் அரசில் மகிந்த கைது செய்யப்பட்டால் அதுவும் நீதிபரிபாலனத்திற்குட்பட்ட தென்றே கருத வேண்டும். மாறாக மகிந்த ராஜபக் ஜனாதிபதியாக இருந்த போது நடந்த கைதுகள், சிறை வைப்புகள் என்பன ஜனாதிபதியின்; பாதுகாப்புச் செயலரின் உத்தரவில் நடந்தது எனில், இப்போது நடப்பதையும் மெளனமாக ஏற்றுக் கொள்வதே நல்லது.
எனது ஆட்சியில் நான் எதுவும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் ஆளும் போதும் அப்படி எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பது எங்ஙனம் நியாயமாகும். மகிந்தவின் ஆட்சியில் கடைப்பிடிக்கப்படாத ஜனநாயகம் மைத்திரியின் ஆட்சியில் பேணப்படும் என்று மகிந்த எதிர்பார்ப்பது மடமைத் தனமாகும்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்துவிட்டால் தாம் எதுவும் செய்யமுடியும் என்ற மமதையின் விளைவுதான் மகிந்த போடும் கூப்பாடு. என்ன செய்வது! விதைத்ததை அறுப்பது தவிர்க்க முடியாதது என்ற இறை நீதி மகிந்தவிடமும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ஆம், பஞ்சணையில் கிடந்தாலும் கைது... கைது... என்று பதறுவது விதி என்றால் தடுக்க யாரால் முடியும்?