Breaking News

நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் நாளை வித்தியாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை காலை ஒரு நிமிட அஞ்சலி செலுத்துமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர், மகிந்த ஜெயசிங்க செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை காலைப் பிரார்த்தனையின் போது மாணவி வித்தியாவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். இந்தக் கொடூர சம்பவத்துக்கு எதிராக ஒவ்வொருவரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்தக் கொடிய செயலைக் கண்டித்து, வரும் 28ம் திகதி கோட்டே தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், பாடசாலை மாணவியின் மரணத்தை வைத்த சில அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயம் தேடவும், இனவாதத்தை தூண்டிவிடவும், பயன்படுத்துவதையும் நாம் கண்டிக்கிறோம். இதனை அரசியலுக்குப் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.