காணாமல் போனோர் யாரும் வெலிக்கடையில் இல்லை
காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் கூறிய போதும், அவ்வாறு யாரையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தங்களின் காணாமல் போன உறவினர்களை கண்டதாக, சிலர் கூறி இருந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கிடம் முறையிட்டமைக்கு இணங்க, காணாமல் போனோரின் உறவினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, காணாமல் போனோர் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணமக தெரிவித்துள்ளார்.
எனினும் அங்கு காணாமல் போனவர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, யுத்தகாலத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்ற 14 ஆயிரம் பேரின் விபரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. அவர்களுள் காணாமல் போனவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா? என்று ஆய்வு செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபரங்கள் விரைவில் இணையத்தளத்தில் தரவேற்றப்படும் என்றும், இதன் அடிப்படையில் குறித்த 14 ஆயிரம் பேருள் காணாமல் போனவர்கள் இருக்கிறார்களா? என்பதை தேடி பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.