"தொடரும் இனப்படுகொலை" - கருத்தரங்கம்
இலங்கையில் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் இனப்படுகொலையின் உச்சமாக நிகழ்ந்ததுதான் 2009 முள்ளிவாய்கால் இனப்படு கொலை.
இத்தகைய சூழலுக்கு நிரந்திர தீர்வு என்பது என்ன?, அரசியல் ரீதியான தீர்வை அடைய, நாம் செய்ய வேண்டியது என்ன? இது குறித்து நடத்தப்பட்ட கருத்தரங்கம் தான் "தொடரும் இனப்படுகொலை" ஈழ தமிழருக்கான நிரந்திர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம்.
அறிவாயுதம் ஆய்விதழ் சார்பாக இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெவ்வேறு தலைப்புகளில் பல ஆளுமைகள் ஆற்றிய கருத்துரை, நேற்று நாள் முழுவதும் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், தனி தமிழீழத்திற்காகதான் அத்தனை உயிர்கள் தியாகம் செய்யப்பட்டிருக்கிறது. எண்ணற்ற போராளிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இத்தகைய சூழலில் தனி தமிழீழத்தை கைவிடுகிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்லலாமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், ஐ.நா மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணை குழவின் அறிக்கை வரும் செப்டம்பரில் வெளிவரும் நிலையில், அதற்குள் தமிழக மக்களிடம் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் அதன் ஒரு பகுதிதான் இந்த கருத்தரங்கம். தமிழீழம் அமையுமானால் அதனால் அதிக நன்மை இந்தியாவிற்க்குதான். இந்த உண்மையை எங்கு நிறுவுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய பெருங்கடல் இந்தியாவிற்க்கானது என சிங்கள அரசு ஒருபோதும் சொல்லியது கிடையாது.
ஆனால் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார், இந்திய பெருங்கடல் இந்தியாவிற்கே சொந்தமென்று. தமிழீழம் அமைக்கப்பட்டால் அந்த கடல் எல்லையில் நாங்கள் உங்களுக்கே பாதுகாப்பு அரணாக இருப்போம். இலங்கையில் சீன ஆக்கிரமிப்பிற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனக் கூறினார்.
ஏற்கனவே கடந்த முறை அறிவாயுதம் ஆய்விதழ் சார்பாக நடத்தப்பட்ட ஓர் கருத்தரங்கத்தில் பேசிய பேராசிரியர் மணிவண்ணன், தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் மண் குதிரையை போன்றவர்கள் யார்வேண்டுமென்றாலும் அவர்களை வடிவமைத்துக்கொள்ளலாம் என விமர்சித்திருந்தார்.
இந்த கருத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் விளக்கம் கேட்பதாக அவர் நேற்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தற்போதும் எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரண்டு பாதைகளில் சென்றுக்கொண்டிருக்கின்றனர். தனி தமிழீழம் என்னும் பாதை, சிங்கள அரசுடனே கூட்டாச்சி என்னும் மற்றொரு பாதை. முதலில் இதில் அவர்கள் செல்ல வேண்டிய பாதை எது என்று அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, தமிழீழத்தில் எப்படி தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர் விடுதலை இயக்கம் செயல்ப்பட்டதோ, அதேப்போல் தமிழகத்தில் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் ஓர் தமிழர் விடுதலை இயக்கம் முன்னேக்கப்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
கருத்தரங்கில் உரையாற்றிய உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூரியப் பிரகாசு, அவசியமான சில கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார். "இனப்படுகொலை என்ற வார்த்தையையே மையப்படுத்துவதனால் சிங்கள அரசு செய்த பிற குற்றங்களான போர்க் குற்றம், மனித உரிமைக்கு எதிரான குற்றம் போன்றைவைகள் மறைக்கபடுவதற்க்கான வாய்ப்பு உள்ளது.
எனவே தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் நீதி கிடைக்கும்படியான செயல்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும். ஈழ தமிழர்களுக்கான நிரந்திர தீர்வை பெறுவதற்கு, போராட்டங்களோடு சில ராஜதந்திர செயல்பாடுகளும் தேவைப்படுகிறது. எனவே அதனையும் நாம் மனத்தில்கொள்ளவேண்டும்.
தனி தமிழீழம் அமைப்பதற்கு உலக நாடுகளின் ஆதரவும் நிச்சயம் தேவைப்படுகிறது. தமிழர்கள் மிகுதியாக வாழும் நாட்டில், அவர்கள் இதற்க்கான அழுததை கொடுக்கலாம்" இவ்வாறு அவர் கூறினார்.