தமிழ்த் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம்!
“டிஜிட்டல்’ கட்டண உயர்வை கண்டித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘கியூப்’ மற்றும் 'யு.எப்.ஓ.' போன்ற டிஜிட்டல் நிறுவனங்களை கண்டிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் திரையுலகத்தை சேர்ந்த முன்னோடிகள் அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறோம்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். இதன் நோக்கம் தயாரிப்பாளர்களிடமிருந்து திரைப்படங்களை ‘டிஜிட்டல்’ முறையில் வெளியிடுவதற்கான கட்டணத்தை அதிகமாக பெற்றுக்கொண்டு, அதன் மூலம் திரையரங்குகளில் விளம்பரம் மூலமாக வருடத்துக்கு சுமார் 400 கோடி ரூபாவை தயாரிப்பாளர்களுக்கு வழங்க மறுப்பதுடன், ‘கியூப்’, ‘யு.எப்.ஓ’ மற்றும் சில நிறுவனங்கள் பங்குபோட்டு கொள்கின்றன.
இது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் செயல். மேற்கண்ட நிறுவனங்களின் செயலை தமிழக அரசுக்கு கொண்டு வரும் வகையிலும், தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய சுமார் 400 கோடி ரூபாவை தர மறுக்கும் நிறுவனங்களை கண்டிக்கும் வகையிலும் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அந்த நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும், திரையுலகின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத்த ருமாறு கேட்டுக்கொள்கிறோம் " என்று கூறப் பட்டுள்ளது.