இரகசிய முகாம்கள் தொடர்பாக தகவல் வழங்கினால், விசாரணைகளை முன்னெடுக்க தயார்!
"இலங்கையில் இருக்கின்றதாகக் கூறப்படும் இரகசிய முகாம்கள் தொடர்பாக தகவல் வழங்கினால், அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க அரசு தயாராக உள்ளது'' என்று வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் தெரிவித்தார்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் காயங்களை ஆற்றவேண்டிய நிலையில், அரசு இருக்கின்றது என்றும், இறுதிக் கட்டப் போரில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும், இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் இரகசிய முகாம்கள் இருக்கின்றன என்றும், இந்த முகாம்களில் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதையடுத்து,
வடக்கில் இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை என்ற கருத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இரகசிய முகாம்கள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக எவரும் சரியான தகவல்களை வழங்கினால் அது பற்றி விசாரிக்கத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.