Breaking News

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது

இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்டறியப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடுகளில், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்குத் தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மிக் போர் விமானக் கொள்வனவு, அரசாங்கங்களுக்கு இடையிலான பரிமாற்றம் என்றே, இது தொடர்பான ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், லண்டனில் உள்ள முகவரியைக் கொண்ட பெல்லிமிஸ்ஸ ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கே கொடுப்பனவைச் செலுத்த வேண்டும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் வரை இத்தகைய ஒரு நிறுவனம் இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், தற்போது, இந்த நிறுவனத்தின் பெயரில், பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளில், கடல்கடந்த இரகசிய வங்கிக் கணக்கு ஒன்று இருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

2006 ஜூலை 26ம் நாள் மிக் போர் விமானக் கொள்வனவு உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாகவே இந்த வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வங்கிக் கணக்கு திறக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாகவே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும், கிடைத்துள்ள ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை கோரிய போது, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் வாயைத் திறக்க மறுத்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேவேளை, இந்த நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, இதன் பணிப்பாளர்கள் யார், அதன் தொடர்புகள் என்ன என்பன உள்ளிட்ட விபரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, நான்கு பேர் கொண்ட குழுவொன்று உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கு பயணமாகியுள்ளது.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர், மற்றும் மூத்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர், இரண்டு குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.