Breaking News

வாழ்க்கைக்காகப் போராடும் வடக்கின் யுத்த விதவைகள்!

இரத்தக்களரியை ஏற்படுத்திய இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் யுத்த விதவைகள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுப்பதற்கு கடும் போராட்டத்தை நடத்தவேண்டியுள்ளதாக இந்தியாவின் ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டுகின்றது.

ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவையின் செய்தியாளர்கள் இலங்கையின் வடபகுதிக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்போது யுத்த விதவைகளின் நிலை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அந்த ஆய்வின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்.

வடக்கில் 50,000 குடும்பங்கள் பெண்களைக் குடும்பத் தலைவர்களாக கொண்டிருப்பதாக கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மதிப்பீடு செய்திருந்தது. முதற் தடவையாக இந்த எண்ணிக்கை அரசாங்கத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிவுக்கு வந்த காலம் தொடக்கம் இது பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டம் புலிகளின் கோட்டையாக ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது. யுத்த விதவைகளின் பிரச்சினை அதிகளவுக்கு தீர்வு காணப்படாமல் சென்றுள்ளது. வளங்கள் பற்றாக்குறையினாலேயே இப்பிரச்சினை அதிகரித்திருக்கிறது என்று ரூபவதி கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி ராமலிங்கம் (39 வயது) விதவையாகும். அவர் 8- 4 வயதுக்கிடைப்பட்ட தனது மூன்று பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றார். யுத்தகாலத்தின் போது எனது கணவர் காணாமல் போயிருந்தார். உணவு தேடிச்சென்று அதன் பின்னர் திரும்பி வரவில்லை. அதன்பின்னர் நான் சீவியத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றேன் என்று அந்தப் பெண் ஐ.ஆர்.ஐ.என்.னுக்கு தெரிவித்திருக்கிறார்.

அவர்களின் வீடு யுத்தகாலத்தில் ஷெல் தாக்குதலால் சேதமடைந்துள்ளது. ஆனால் திருத்திக் கட்டுவதற்கு யோகேஸ்வரியினால் இயலாது. 2011 இல் அவர் தனது கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளார். அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்திடமிருந்து 189 டொலர் கிடைத்திருந்தது. குடும்பம் மீளக் குடியேறுவதற்காக அந்தத் தொகை வழங்கப்பட்டிருந்தது. கூரையைத் திருத்துவதற்கு சுமார் 50 டொலர்களை செலவிட்ட பின்னர் மீதிப் பணம் உணவுக்குச் செலவிடப்பட்டுவிட்டது. அதன் பின்னர் கூலி வேலை செய்து யோகேஸ்வரி சீவித்து வருகிறார்.

20 கிலோமீற்றர் தூரத்திற்குச் சென்று அவர் வேலை செய்யவேண்டியுள்ளது. நெல் அறுவடைக் காலத்தில் மாத்திரம் வயல்களில் வேலை கிடைக்கின்றது. அவருக்கு உள்ளூரில் தையல் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. தேவாலயத்தை தளமாகக் கொண்ட அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனமொன்று அவருக்கு தையல் பயிற்சியை பெற்றுக்கொடுத்தது. ஆனால் வேலைவாய்ப்பின்மையால் இந்தப் புதிய தொழிலை யோகேஸ்வரியினால் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. போர்தான் கஷ்டமாக இருக்குமென நினைத்தேன். ஆனால் சமாதானமும் கஷ்டமாகவே இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரியில் பதவியேற்றிருந்த புதிய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புதிய அணுகுமுறைக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் துன்பமான சூழ்நிலை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கிலுள்ள ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பமாவது கணவரில்லாமல் பெண்களின் தலைமையிலேயே இருக்கின்றது என்று உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய குடும்பங்களின் தேவைகளைக் கவனிப்பதற்கு கிளிநொச்சியில் தேசிய நிலையமொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது இந்தப் பெண்களுக்கு 260 டொலர் வரையிலான குறைந்த வட்டியுடனான கடனை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘இத்தகைய நிலையமொன்று அமைக்கப்படுவது முதற்தடவையாகும். இந்த தனித்துவமான குழு தொடர்பாக இப்போது நாம் பார்க்க முடியும். உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்க முடியும்’ என்று கேதீஸ்வரன் தெரிவித்திருக்கிறார். தொழில்வாய்ப்பின்மையே பாரிய பிரச்சினையாக இருப்பதாக அவர் கூறுகிறார். தையல் உட்பட தொழில்பயிற்சியை நாங்கள் வழங்குவோம் என்று அவர் கூறுகிறார்.

இதுவரை யுத்த விதவைகளுக்கு ஒரு சில செயற்திட்டங்களே வடிவமைக்கப்பட்டுள்ளன. 2013 தொடக்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கு 378 டொலர் வரையிலான நிதியுதவியை 435 பெண்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் உதவி தேவைப்படுவோரில் சிறிய எண்ணிக்கையானோருக்கு இந்த உதவி கிடைக்கின்றது.

தேசிய மட்டத்தில் பெண்களின் வேலையில்லாப் பிரச்சினை 6.6 சதவீதமாக காணப்படுகின்றது. ஆனால் வடக்கில் பெண்கள் மத்தியில் தொழில்வாய்ப்பின்மை உயர் மட்டத்தில் இருக்கின்றது என்று ஆய்வுக் கட்டுரை ஒன்றை தயாரித்திருக்கும் முத்துகிருஷ்ணா சர்வாநந்தன் கூறியிருக்கிறார். அவரின் ஆய்வு எதிர்வரும் ஜூனில் வெளியிடப்படவுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு இல்லாத பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும். யாழ்ப்பாணத்தில் 10.9 வீதம் , கிளிநொச்சியில் 29.4 வீதம், மன்னாரில் 21.6 வீதம், முல்லைத்தீவில் 20.5 வீதம், வவுனியாவில் 9 சதவீதமாக பெண்கள் தொழில்வாய்ப்பின்மை காணப்படுகின்றது. 20 வீதத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற பெண்கள் இருக்கும் மாவட்டங்கள் உக்கிரமான போர் இடம்பெற்றவையாகும். ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால் கொழும்பிலுள்ள பெண்களின் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாக உள்ளது. காலியில் 7 வீதமாகவும் கண்டியில் 6 .8 சதவீதமாகவும் காணப்படுகிறது.

அரசாங்க வேலைகளுக்கு ஆட்திரட்டும்போது, பெண்களை தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டுமென சர்வானந்தன் தெரிவித்திருக்கிறார். வறுமை பல பெண்கள் தமது பிள்ளைகளை விட்டுச் செல்வதற்கு நிர்ப்பந்திருக்கின்றது என்று வடக்கிலுள்ள சமூகப் பணியாளர்கள் கூறுகின்றனர். வேலை தேடி அவர்கள் தமது கிராமங்களை விட்டு வெளியேறிச் செல்வதாகவும் பிள்ளைகளை விட்டுவிட்டு செல்லும் நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுவதுடன், சிறுவர் துஷ்பிரயோகங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இது அடிப்படையில் பாரிய பிரச்சினையாகும் என்று யாழ்ப்பாணத்தைத் தளமாக கொண்ட பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் சரோஜா சிவச்சந்திரன் கூறியுள்ளார். இந்த அமைப்பு தொழிற் பயிற்சியை வழங்கி வருகிறது.

பெண்கள் விபசாரத்தில் தஞ்சமடையும் சம்பவங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆயினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான விபரங்கள் கிடைக்கவில்லை. யுத்தத்திற்குப் பின்னர் நீண்டகாலமாக போர்விதவைகளின் துன்பநிலை காணப்படுகிறது. ஏனெனில் இந்த உணர்வுபூர்வமான விடயமானது இப்போதும் காணாமல் போயிருக்கும் அல்லது தகவல் கிடைக்காதவர்களின் தொடர்புபட்ட விடயமாக இருந்து வருகிறது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இறந்த எண்ணிக்கை இலங்கை அரசாங்கத்தால் ஒருபோதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

40,000 பேர் வரை 2008, 2009 வரை இறந்திருக்கலாமென ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு தெரிவித்திருந்தது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களினால் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் இறுதிக் கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என ஊகிக்கப்படுகிறது. இதனால் ஒரு தலைமுறை பெண் விதவைகள் உருவாகியுள்ளனர்.