மைத்திரி தலைமையில் மஹிந்தவை பிரதமராக்கும் ஒருங்கிணைந்த அரசு வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி யாகவும் உள்ள ஒருங்கிணைந்த அரசாங் கமொன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைக்குமாறு குருநாகலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தின் போது மக்களை வலியுறுத்தவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்று கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (07) நடைபெற்றது. இதில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, மேற்கண்ட வலியுறுத்தலை விடுக்கவுள்ளதாகக் கூறினர்.
இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, 'எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களை கலைக்குமாறு அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக' கூறினார். அத்துடன், நாடாளுமன்றம் கூட்டிணைந்து நிறைவேற்றிய புதிய உள்ளூராட்சிமன்ற சட்டத்துக்கமைய இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக தினேஸ் குணவர்தன குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வாசுதேவ நாணாயக்கார, 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவது தொடர்பில் குருநாகலில் நடைபெறவுள்ள மக்கள் கூட்டத்தின் போது வலியுறுத்தப்படும்' என்றார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் உள்ள ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைக்குமாறும் மக்களிடம் இதன்போது கோரவுள்ளதாக அவர் கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, 'நாளை (இன்று வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள குருநாகல் மக்கள் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை. தனக்கு பதிலான தனது கட்சியின் உறுப்பினரொருவர் பங்கேற்பார்' என்று குறிப்பிட்டார். 'இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறித்து நீதிமன்றில் ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டி இருப்பதாகவும் அதனாலேயே மக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் கம்மன்பில மேலும் கூறினார்.
இது இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் இணக்கம் தெரிவித்தாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்றைய தினம் குருநாகலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.