Breaking News

புங்குடுதீவு சம்பவத்தின் எதிரொலி: யாழ். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றங்கள்!

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைய இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லஷ்மன் வீரசேகர சீதாவாக்கைபுர பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். 

இதேவேளை, சீதாவாக்கைபுர பொலிஸ் பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.கே.ஜெயலத் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியம் 1 இற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கிளிநொச்சியில் கடமையாற்றிய டி.எஸ்.டி.வீரசிங்க யாழ்ப்பாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியம் 2 இற்குப் (ஊர்காவற்றுறை) பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ.சேனரத்ன முல்லைத்தீவுக்கு மாற்றப்பட்டு, முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.ரந்தெனிய ஊர்காற்றுறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.பெரேரா மன்னாருக்கு மாற்றப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி வி.பாலசூரிய வவுனியாவுக்கு மாற்றப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான சிரேஷ்ட இன்ஸ்பெக்டர் கே.வூட்லர் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அத்துடன் மன்னார் பிரந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.பெர்னான்டோ யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.