தீர்ப்புக்கு தடை வாங்கினால் முதல்வராக முடியாது! மீண்டும் ஜெயலலிதாவை முடக்க முயற்சி
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை வாங்கினால் ஜெயலலிதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் மே 11ஆம் திகதி, கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதமும் இரத்து செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் நகலை படித்து பார்த்த சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில், அதில் கூட்டல் கணக்கில் பிழை உள்ளதாகவும், அதனால் ஜெயலலிதா பெற்ற கடன் தொகை மதிப்பு அதிகரித்து காட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில், வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீதம் அளவுக்கு ஜெயலலிதா சொத்து குவித்திருப்பதால், அது குற்றமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த எண்களை சரியாக கூட்டிப் பார்த்தால், 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா இதுகுறித்து கூறுகையில், மேன்முறையீடு செய்வது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என்றபோதிலும், இந்த வழக்கு மேன்முறையீட்டுக்கு உகந்ததுதான். உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும்போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கையாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது.
ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கினால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கும் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கில் பிழை இருப்பது தெரியவந்தால், அதை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் எளிதில் இடைக்கால தடை கிடைத்துவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ஜெயலலிதா கீழமை நீதிமன்றம் அறிவித்தபடி குற்றவாளியாகவே தொடரும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் அரசு பதவிகளை வகிக்க முடியாது. இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர் தனது பதவியை மீண்டும் பறிகொடுக்க நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.