சமூக சேவை உத்தியோகஸ்த்தரின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
சமூக சேவை உத்தியோகஸ்த்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூக சேவை உத்தியோகஸ்த்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஆயுத கலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டு பிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகஸ்த்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நிதியினை நிலை நாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் சமூக சேவை உத்தியோகஸ்த்தர்களினால் கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என்ற மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் முகமாக கையளிக்கப்பட்டது.
இதன்போது குறித்த மகஜரை உரிய நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் உறுதியளித்தார்.
கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது சக உத்தியோகஸ்த்தரான சச்சிதானந்தம் மதிதயன் அவர்கள் கடந்த 26ம் திகதி அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் மண்டூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து சமூக சேவை உத்தியோகஸ்த்தராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே இத்துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். நாட்டில் வன்செயல்கள் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு துப்பாப்பிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மழை ஓய்ந்தும் துவானம் முடியவில்லை என்பது போன்ற நிலையே இப்பொழுது காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தினையும், சூத்திரதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தி, அரச உத்தியோகஸ்த்தரிடையேயும், பொதுமக்களிடையேயும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் மகஜரில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் பணிபுரியும் முப்பது உத்தியோகஸ்த்தர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.