ஜோன் கெரியுடனான சந்திப்பு திருப்தி! த.தே.கூ. தெரிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
43 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், 'ஜோன் கெரியுடனான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்பில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற சுமார் 67 ஆயிரம் நிலப்பரப்புகளை மக்களிடம் மீளக் கையளிப்பதனூடாகவே மீன்குடியேற்றம் சாத்தியப்படும் என்பதை வலியுறுத்தினோம்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜோன் கெரி, குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தும் என உறுதியளித்ததோடு தற்போது நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு, இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் நில விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீர்க்கமான அறிவித்தலை விடுப்பதனூடாக, மக்களுக்கு தெளிவான தீர்வொன்றினை வழங்க முன்வரவேண்டும் என்பதையும், இவை சாத்தியப்படும் பட்சத்திலேயே மீள்குடியேற்றம் சாத்தியப்படும் என்பதையும் வலுவாக வலியுறுத்தினோம்.
அது மட்டுமல்லாமல், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையும், நியாயமான அதிகாரப் பகிர்வின் அவசியம் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதங்கத்தினை ஜோன் கெரியுடன் பகிர்ந்து கொண்டது. மாற்றுத் தலையீடுகள் இல்லாத பகிரப்பட்ட இறையான்மை அடிப்படையில் அரசியல் தீர்வு என்பதையும், காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பாகவும் வலியுறுத்தினோம்' என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவொன்றினை எட்ட ஒத்துழைப்பதாக குறிப்பிட்டதாகவும் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.