ஐ.ம.சு.மு. ஆட்சிக்கால மோசடிகளை அம்பலப்படுத்துவேன் பிரதமர் ரணில் சூளுரை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில் எமது புதிய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. எனினும் நாம் குற்றவாளிகளை தண்டிப்பதில் பின்னிற்பதாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான சந்தேகங்கள் தேவையற்றவை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னைய ஆட்சியாளரின் ஊழல் மோசடிகள் தொடர்பில் அனைத்து விடயங்களையும் நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அரசாங்கத்தில் தனியார் மற்றும் அரச துறையில் நடந்துள்ள மிக மோசமான ஊழல் மோசடிகள் தொடர்பில் எமது அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பாத ஒரு சிலர் பாராளுமன்றத்தில் அர்ஜுன மகேந்திரனை காரணம் காட்டி எமது செயற்பாடுகளை தடுக்கின்றனர்.
முன்னைய அரசாங்கத்தில் அனைவரினதும் வாய்கள் கட்டப்பட்டு ஊமை அமைச்சர்களாகவே செயற்பட்டனர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எமது அரசாங்கத்தில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் மட்டுமல்லாது அமைச்சர்கள் தமது எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் உரிமையையும் வழங்கியுள்ளோம். ஆனால் அதையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் பாராளுமன்றத்தில் சர்ச்சையை உருவாக்கி அவர் தொடர்பில் நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவரை விசாரிக்க கோரியிருந்தனர். அதற்கு நாம் மதிப்பளித்து அவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்தினோம். அந்த விசாரணை முடிவுகள் எமக்கு கிடைத்துள்ளன. அதற்கமைய மத்திய வங்கி ஆளுநர் குற்றவாளி அல்ல என அவர்களது விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) நான் பாராளுமன்றத்தில் தெரிவிக்க முற்பட்ட போது பல தடங்கல்கள் ஏற்பட்டன.
மேலும் எமது அரசாங்கத்தில் மோசடிகள் நடப்பதாக கூறும் சிலர் கடந்த அரசாங்கத்தில் செய்த மோசடிகளை மறைக்கின்றனர். கடந்த 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு நிதித் திரட்டலுக்காக 270 பில்லியன் ரூபாய் பணத்தை திறைசேரி பிணை முறி சட்டத்துக்கு முரணான வகையில் வெளியிட்டிப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந் நிதி கொடுப்பனவு எவ்வித அறிவித்தலும் இன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நண்பர் வட்டாரத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.விலை மனுக்கோராது தமது நண்பர்களுக்கு மஹிந்த கொடுத்துள்ளார். ஆனால் இத் தொகை அரசாங்கத்தின் நிதியில் சேர்க்கப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு நான் தெரிவித்துள்ளேன். கடந்த அரசாங்கத்தில் பல ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை எப்படியேனும் நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிப்பதே எமது நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.