Breaking News

தேர்தல்முறை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுடன் மைத்திரி ஆலோசனை

20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது யோசனைகளை நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆராயும் சந்திப்பு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கு செய்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக அமைச்சரவையின் முன்வைக்கப்பட்ட பத்திரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே முன்வைக்கப்பட்ட இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதானால் அதற்கான முன்மொழிவுகளை, நாளை புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக, ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு, மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அந்த திருத்த யோசனைகள் கையளிக்கப்பட்ட பின்னர், மீண்டும் ஒரு முறை கூடி, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆராய்ந்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.