Breaking News

மீனவர்கள் அரசியல் கட்சிகளின் மாய வலையில் சிக்கிவிடக் கூடாது!

தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது, 

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக் கிடையேயான பிரச்சினை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தீர்க்கப்பட வேண்டும், மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், தமிழக பா.ஜ. அவர்களுடன் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சினைகளை அறிந்தது. 

பின், தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதில், பிரதமர் மோடியும் உறுதியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். அதனால்தான், தமிழக மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று, அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச வைத்தோம். 

அவரும் நல்ல எண்ணத்தோடு மீனவ சங்க பிரதிநிதிகளிடம் பேசினார். அப்போது, ´இன்னொரு நாட்டின் எல்லைக்குள் சென்று, மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த முடியாது. பாரம்பரிய முறைப்படி மீன்பிடிக்க சென்றால், அதற்கான அனுமதியை பெற்று தர தயார். இல்லாத பட்சத்தில், மாற்று வழியாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு, தேவையான பயிற்சிகளை வழங்குவதோடு, தேவையான நிதியை ஒதுக்கவும் தயாராக இருக்கிறேன்´ என, தெரிவித்தார். 

ஆனால், அமைச்சரின் ஆக்கப்பூர்வமான பேச்சை சிலர், அரசியலாக்குவது சரியா? கச்சத்தீவு பிரச்சினை, நெடுநாளைய பிரச்சினை. அதை தாரை வார்த்தபோது எதிர்க்காமல் உடன் இருந்தவர்கள், இப்போது, உடனடியாக அதை மீட்க சொல்வது வேடிக்கையாக உள்ளது. 

வாழ்க்கைக்காக, வலை வீசுபவர்கள் மீனவர்கள். அவர்கள், அரசியல் கட்சிகளின் மாய வலையில் சிக்கி விடக் கூடாது. மீனவர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு தவறாக வழி நடத்துகிறவர்களை, அவர்கள்தான், இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும், இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.